தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருகே ரூ.63 லட்சத்தில் அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருகே ரூ.63 லட்சத்தில் அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருகே ரூ.63 லட்சத்தில் அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி
Published on

பொறையாறு:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருகே ரூ.63 லட்சத்தில் அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

டேனிஷ் கோட்டை

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டையின் வெளிப்புறத்தில் கட்டப்பட்டுள்ள அலைதடுப்பு சுவரின் முழுபகுதி சேதமடைந்து இடிந்தது. கோட்டையும் கடல் அரிப்பின் தாக்கத்தால் பாதிப்பிற்குள்ளாகும் நிலையில் உள்ளது. டேனிஷ் கோட்டையை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அலை தடுப்பு சுவரின் முழு பகுதி, கடந்த ஆண்டு ஏற்பட்ட நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக ஏற்பட்ட கடல் அலைகளின் கடும் சீற்றத்தால் சேதமடைந்தது.

அப்போதைய கடும், தொடர் மழையின் காரணமாக கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பு சுவரின் மற்றொரு பகுதியும் தற்போது சேதம் அடைந்துள்ளது. இது தவிர, கோட்டை மதில் சுவரையொட்டி அமைக்கப்பட்டிருந்த முள்வேலி தடுப்பு சுவரும் சேதம் அடைந்துள்ளது. டேனிஷ் கோட்டை எதிரில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது.

கடல் அரிப்பு அதிகரிப்பு

கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் கடல் சீற்றம் காரணமாக, டேனிஷ் கோட்டையின் அருகே கடல் அரிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கோட்டை மதில் சுவரில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்த கடல் அலைகள், தற்போது மணலை அரித்து, சுமார் 10 மீட்டர் தொலைவிற்குள் வந்து விட்டது.

தற்போது மதில் சுவருக்கு மிக அருகே கடல் அலைகள் அடிக்கின்றன. கடல் அரிப்பு தொடர்ந்தால், டேனிஷ் கோட்டையின் சுவர்களை அலைகள் தாக்கும் நிலை ஏற்படும். தற்போது கடல் அரிப்பு டேனிஷ் கோட்டையை பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், கோட்டையை கடலிடம் நாம் இழக்கும் நிலை கூட வரலாம். எனவே உடனடி நடவடிக்கை எடுத்து கோட்டை அருகே அதிக உயரம் மற்றும் அகலம் கொண்ட கடலில் கருங்கல்லால் ஆன அலைதடுப்பு சுவரை அமைக்க வேண்டும் என 'தினத்தந்தி'யில் செய்தி பிரசுரிக்கப்பட்டது.

அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி

இதன் எதிரொலியாக தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி டேனிஷ் கோட்டை கிழக்கு பகுதியில் 110 மீட்டர் நீளத்திற்கும், 11 அடி உயரத்திற்கும் ரூ.63 லட்சத்து 35 ஆயிரம் செலவில் அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடல் அரிப்பு மற்றும் இயற்கை சீற்றங்களிலிருந்து வரலாற்று சிறப்பு மிக்க டேனிஷ் கோட்டையை பாதுகாக்க உத்தரவிட்ட தமிழ்நாடு அரசிற்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் சமூக ஆர்வலர்கள், சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com