அங்கீகாரம் வாங்காமல் கட்டுமானம் கட்டுவது தவறு: தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணைத்தலைவர் பேட்டி

கரூரில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலியான இடத்தை தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணைத்தலைவர் பார்வையிட்டார். பின்னர் அங்கீகாரம் வாங்காமல் கட்டுமானம் கட்டுவது தவறு என கூறினார்.
அங்கீகாரம் வாங்காமல் கட்டுமானம் கட்டுவது தவறு: தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணைத்தலைவர் பேட்டி
Published on

ஆய்வு

கரூர் மாவட்டம், சுக்காலியூர் காந்திநகர் பகுதியில் தனி நபர் வீட்டு கட்டுமான பணியின்போது கழிவுநீர் தொட்டியில் கான்கிரீட் பலகைகள் மற்றும் சவுக்கு கட்டைகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது விஷவாயு தாங்கி மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தனர்.

இதையடுத்து அந்த வீட்டை நேற்று தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணைத்தலைவர் அருண்ஹெல்டர், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் ஆகியோர் தலைமையில், தேசிய ஆணையத்தின் துணை தலைவரின் தனி செயலாளர் அன்மோல், தேசிய ஆணையத்தின் இயக்குனரின் நேர்முக உதவியாளர் ராமபிரபு, ஆணையத்தின் மூத்த புலனாய்வாளர் லிஸ்டர், மாவட்ட பாலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

உரிய நடவடிக்கை

பின்னர் சுக்காலியூர் தோரணக்கல்பட்டியை சேர்ந்த தொழிலாளர் ராஜேஷ்குமார், சின்னமலைப்பட்டியை சேர்ந்த தொழிலாளர்கள் கோபால், சிவக்குமார் மற்றும் தாந்தோணிமலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த தொழிலாளர் மோகன்ராஜ் ஆகிய இறந்து போன 4 பேரின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண நிதி, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, வீடு மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசு நிவாரண உதவியினை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டதை கேட்டறிந்து, இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு உடைகளை தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணை தலைவர் அருண்ஹெல்டர் வழங்கினார்.

மேலும், கிடைக்க வேண்டிய அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

பாதுகாப்பு இல்லாத கட்டுமான பணி

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அமைச்சர் இக்குழுவிற்கு தலைவராக உள்ளார். நான் பட்டியல் இன உறுப்பினருக்கு துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறேன். தகவல் கிடைத்த உடனே நேரடியாக அப்பகுதிகளுக்கு சென்று இது போன்ற மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து கொடுத்து வருகிறோம். மேலும், தொழிலாளர்களின் இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தவர்கள் குடும்பத்தார்களுக்கு நேரில் சென்று வழக்குப்பதிவுக்கு முன்னதாகவே ரூ.6 லட்சமும், வழக்கு முடிந்தவுடன் ரூ.6 லட்சமும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். இவை அம்பேத்கர் உடைய வலிமையை நிகழ்த்தி காட்டி வருகிறது. அரசியலமைப்பு சட்டப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கி வருகிறோம்.

அங்கீகாரம் வாங்காமல் கட்டுமானம் கட்டுவதும் தவறான ஒன்று. அதேபோல் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுப்பது கடமையாக இருக்க வேண்டும். வரும் காலங்களில் இது போன்று நடைபெறாமல் இருக்க இது குறித்து போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத கட்டுமான பணியில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியும் தேவையான விழிப்புணர்வு அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். இது போன்ற மரணங்கள் வரும் காலங்களில் நடக்கக்கூடாது, என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com