என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்றுடன் நிறைவு

என்ஜினீயரிங் படிப்புக்கான 4-வது கட்ட கலந்தாய்வு இன்றுடன் (புதன்கிழமை) நிறைவு பெறுகிறது.
என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்றுடன் நிறைவு
Published on

சென்னை,

2020-21-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 1-ந் தேதி தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 8-ந் தேதி முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 4 கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த கலந்தாய்வில், 4-வது கட்ட கலந்தாய்வு இன்றுடன் (புதன்கிழமை) நிறைவு பெறுகிறது.

மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் முதல் 3 கட்ட கலந்தாய்வு முடிவில் 41 ஆயிரத்து 924 இடங்கள் மட்டுமே நிரம்பின. 4-ம் கட்ட கலந்தாய்வுக்கு சுமார் 40 ஆயிரத்து 573 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். முன்பணம் செலுத்துதல், விருப்ப இடங்கள் மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீட்டை உறுதி செய்வது போன்றவை முடிந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இறுதி ஒதுக்கீடு ஆணை ஒதுக்கீட்டை உறுதி செய்த மாணவ-மாணவிகளுக்கு இன்று அளிக்கப்பட இருக்கிறது.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கு மொத்தமாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட 4 கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், அடுத்தகட்டமாக துணை கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. கடந்த ஆண்டில் 83 ஆயிரத்து 396 இடங்கள் நிரம்பின. ஆனால் இந்த ஆண்டு அதைவிட குறைவாகவே இடங்கள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com