சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கருத்து கேட்பு கூட்டம்

நாமக்கல்லில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடந்தது.
சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கருத்து கேட்பு கூட்டம்
Published on

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர், லத்துவாடி, பரளி ஆகிய பகுதியில் 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதற்கான நிலம் அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி விவசாயிகளும் பல்வேறு அரசியல் கட்சியினரும் இணைந்து, தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சாகும்வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று நாமக்கல் உதவி கலெக்டர் அலுவலகத்தில் 'சிப்காட்' தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை தாங்கினார். அப்போது, 'சிப்காட்' எதிர்ப்பாளர்கள், நிலம் பாதிக்கப்படும் விவசாயிகள், ஆதரவாளர்கள் ஆகியோரிடம் தனித்தனியாக கருத்துகள் கேட்கப்பட்டன.

இதில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால், விவசாய நிலங்கள், கால்நடைகள், குடிநீர் ஆதாரங்கள் கடுமையாக பாதிக்கப்படும். அதனால், 'சிப்காட்' அமைக்க கூடாது என கருத்து தெரிவித்தனர். இதனை கலெக்டர் உமா கவனத்துடன் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து, ஒரு தரப்பினர் மனு அளித்து விட்டு கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர். அப்போது அவர்களுக்கும், எதிர்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. அங்கு வந்த கலெக்டர் உமா, உதவிகலெக்டர் சரவணன் ஆகியோர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து, கலைந்து சென்றவர்கள் 'சிப்காட்' அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com