மத்திய சுகாதாரத்துறையுடன் ஆலோசனை: ‘நீட்’ தேர்வை ஏற்க முடியாது; தமிழக அரசு மீண்டும் திட்டவட்டம்

மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளருடன், தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
மத்திய சுகாதாரத்துறையுடன் ஆலோசனை: ‘நீட்’ தேர்வை ஏற்க முடியாது; தமிழக அரசு மீண்டும் திட்டவட்டம்
Published on

அதில் நீட் தேர்வை தமிழகத்தில் ஏற்க முடியாது என்ற கருத்தை மீண்டும் முன்வைத்தனர்.

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் என்ற நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. நீட் தேர்வு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தமிழக அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக நீட் தேர்வு நடந்த முதலாம் ஆண்டு மட்டும் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டு, அதன்பிறகு 4 ஆண்டுகளாக இந்த தேர்வு மூலமாகவே தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.தொடர்ந்து தமிழக அரசும், தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு குரல் எழுப்பி கொண்டு தான் இருக்கின்றன. இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளருடன் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்திலும், தமிழக சுகாதாரத்துறை நீட் தேர்வு குறித்த கருத்துகளை முன்வைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, டெல்லியில் இருந்து சுகாதாரத்துறை இணை செயலாளர், நீட் சீர்திருத்தம் (நீட் ரீபார்ம்) என்ற பெயரில் காணொலி காட்சி மூலம் அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அதில் தமிழகத்தின் சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் கே.நாராயண பாபு மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் சாந்திமலர் ஆகியோரும் பங்கு பெற்றனர்.

இந்த கூட்டத்தில் வர இருக்கக்கூடிய கல்வியாண்டில் நடத்தப்பட உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதில் தற்போது முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக நடத்துகின்றன. அதனை ஒரே முறையாக மத்திய சுகாதாரத்துறையே நடத்துவது குறித்து பேசப்பட்டது. அதற்கு தமிழக சுகாதாரத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அதை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தயாராக இல்லை என்றும், ஏற்கனவே பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையே தொடர வேண்டும் என்றும் கூறி இருக்கிறது.

அதேபோல், ஏற்கனவே நீட் தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தொடர்ந்து நாங்கள் அதில் உறுதியாக உள்ளோம். அதனை ஏற்க முடியாது என்ற கருத்தையும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக அரசு கொள்கை ரீதியாக இன்னும் எந்த முடிவும் எடுக்காத நிலையில், அதனை இந்த முறை பின்பற்ற முடியாது என்றும், இடஒதுக்கீட்டில் ஏற்கனவே என்ன நடைமுறை இருக்கிறதோ? அதே நடைமுறை தான் பின்பற்றப்படும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com