சென்னையில் நுகர்வோர் பாதுகாப்பு கருத்துப்பட்டறை - தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்பு


சென்னையில் நுகர்வோர் பாதுகாப்பு கருத்துப்பட்டறை - தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்பு
x

நுகர்வோர் தொடர்புடைய குறைதீர்க்கும் முறைகளை மேம்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து கருத்துப்பட்டறையில் விவாதிக்கப்பட்டது.

சென்னை,

தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான நுகர்வோர் பாதுகாப்பு குறித்த ஒருநாள் கருத்துப்பட்டறை, சென்னையில் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள நுகர்வோர் விவகாரங்கள் துறையின் மூலம் தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான (தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள்) நுகர்வோர் பாதுகாப்பு குறித்த ஒருநாள் கருத்துப்பட்டறை, சென்னையில் இன்று நடைபெற்றது.

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர், இணைச் செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள், தென்னிந்திய மாநிலங்களின் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் முதன்மைச் செயலாளர்கள், மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களின் தலைவர்கள்/ உறுப்பினர்கள், முக்கிய தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பிற தொடர்புடைய பிரச்சனைகள் குறித்து பங்குதாரர்களிடையே அறிவுப்பகிர்வை மேம்படுத்துவதே கருத்துப்பட்டறையின் முக்கிய நோக்கமாக அமைந்தது. இ-ஜாக்ரிதி எனும் தொழில்நுட்ப தளத்தின் வாயிலாக வீடு மனை விற்பனை, காப்பீட்டுத் துறை, மருத்துவ அலட்சியம் ஆகியவற்றைச் சார்ந்த நுகர்வோர் தொடர்புடைய குறைதீர்க்கும் முறைகளை மேம்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், தொழில், வணிகம் மற்றும் வர்த்தகம் தொடர்பான ஆய்வு, சட்டமுறை எடையளவு, தர மதிப்பீடு ஆகியவைகள் குறித்தும் தேசிய ஆய்வு இல்லத்தின் தொழில்நுட்பக் குழுவால் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் கூடுதல் செயலாளர்கள் மற்றும் இணைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

இந்த கருத்துப்பட்டறை, பங்குதாரர்களிடையே அறிவுப் பகிர்வு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஒரு தளமாக செயல்பட்டு, தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வலுவான நுகர்வோர் பாதுகாப்பு சூழலை உறுதி செய்தது. இக்கருத்துப் பட்டறை சிறப்பான முறையில் நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story