தமிழகத்திற்குள் நீட் தேர்வு நுழையாமல் இருக்க தொடர்ந்து நடவடிக்கை - அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் ஆகஸ்ட் மாத‌த்தில் தான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இன்று காலை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் பொன்முடி, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து முதல்-அமைச்சருடன் நானும், உயர் கல்வித்துறைச் செயலர்களும் கலந்து பேசினோம். கல்லூரி மாணவர்கள் சேர்க்கை என்பது ஜூலை 31-ம் தேதிக்குப் பின்தான் நடத்தப்பட வேண்டும். ஏனென்றால் சிபிஎஸ்இ தேர்வு மதிப்பெண்கள் ஜூலை 31ஆம் தேதிதான் வெளியாகிறது.

நம்முடைய கல்லூரிகளில் அது தனியாராக இருந்தாலும், அரசாக இருந்தாலும் சிபிஎஸ்இயில் தேர்வு பெற்று வருகின்ற மாணவர்களின் மதிப்பெண்களும் கணக்கெடுத்துக் கொள்ளப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. அதேபோன்று மாநிலக் கல்வி வழியில் பயின்ற மாணவர்கள் அவர்களுக்கான பிளஸ் 2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் என்று முதல்-அமைச்சர் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

அந்த அறிவிப்பின் அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண்களைக் கணக்கிடும் பணி நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் அது முடிவடையும். ஆகவே பிளஸ் 2 தமிழக மாநில வழிக்கல்வியில் படித்த மாணவர்கள், சிபிஎஸ்இ வழியில் படித்த மாணவர்கள் மதிப்பெண் அனைத்தும் ஜூலை 31-ம் தேதிக்குள் இறுதிப்படுத்தப்பட்டுவிடும். அதற்குப் பிறகுதான் தனியார், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

சில தனியார் கல்லூரிகளில் சேர்க்கை நடக்கிறது என்று தகவல் வருகிறது. அதையெல்லாம் செய்யக் கூடாது. சிபிஎஸ்இ மதிப்பெண், மாநிலக் கல்வி வழியில் பயின்ற மாணவர்களின் மதிப்பெண் வந்தபின்தான், ஆகஸ்டு 1ஆம் தேதிக்குப் பின்தான் கல்லூரிகளில் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் எங்களுக்கு உத்தரவாகத் தெரிவித்துள்ளார். ஆகவே ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்துதான் சேர்க்கை தொடங்கும். அதையும் மீறி சேர்க்கை நடந்தால் அது தவறு. அரசு அதை அனுமதிக்காது, நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால், 9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக்கில் சேர்க்கப்படும் மாணவர்கள் 2 நாட்களுக்கு முன்னதாக பாலிடெக்னிக் மாணவர்கள் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டதின் அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள். இதுதான் கல்லூரி சேர்க்கைக்கான முடிவு. பொறியியல் கல்லூரிகளில் வழக்கமாக இருக்கும் அதே முறைதான் பின்பற்றப்படும், சிபிஎஸ்இ, மாநிலக் கல்வி மதிப்பெண்கள் அனைத்தும் ஒரே மதிப்பெண்தான். அதில் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கைக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ஏற்கெனவே உள்ள நடைமுறைதான் உள்ளது. கூடுதல் மதிப்பெண் பெறத் தேர்வு எழுதுபவர்களுக்காக சேர்க்கை நிறுத்தப்படாது. அதற்கு வாய்ப்பில்லை.

தமிழகத்திற்குள் நீட் தேர்வு நுழையாமல் இருக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டம் இயற்றப்படும். ஏற்கனவே, கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்திருக்கிறோம் என்பதால், நீட் தேர்வையும் ரத்து செய்வோம் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com