

தஞ்சாவூர்,
காவிரி டெல்டா மாவட்டங்களில் கன மழை கொட்டித்தீர்த்து வருகிறது. நேற்று காலை முதல் இடைவிடாது அடைமழையாக பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை முடிந்து தற்போது சம்பா, தாளடி நடவுப்பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து நடவுப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதில் குறிப்பாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் சம்பா, தாளடி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
90 ஆயிரம் ஏக்கர்
இந்த நிலையில் மழை பெய்யத்தொடங்கி இருப்பதால் இளம் நடவு பயிர்கள் நீரில் மூழ்கி காணப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, தாளடி நடவுப்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.
இதேபோல் நாகை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கரிலும் என மொத்தம் 90 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி காணப்படுகின்றன.
விவசாயிகள் கவலை
மழை நின்றால் தான் வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் வடியும். 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றால் பயிர்கள் அழுகத்தொடங்கி விடும். இதனால் விவசாயிகள் கவலையுடன் காணப்படுகின்றனர்.
வேளாண்மைத்துறை அதிகாரிகளும் ஒவ்வொரு பகுதியாக சென்று நீரில் மூழ்கிய பயிர்கள் குறித்து கணக்கெடுத்து வருகிறார்கள்.