

சென்னை,
டிசம்பர் 1, 2, 3, தேதிகளில், தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடத்த விவசாய தொழிலாளர் சங்கம் முடிவு. இது தொடர்பாக, விவசாய தொழிலாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் (பிகேஎம்யூ) மாநில நிர்வாகக் குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டங்கள், தருமபுரி நகரில் உள்ள வன்னியர் திருமண மண்டபத்தில் சங்கத் தலைவர் நா.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சங்கத்தின் மூத்த தலைவர் இரா.முத்தரசன், பொது செயலாளர் அ. பாஸ்கர், துணை தலைவர் க.மாரிமுத்து எம்.எல்.ஏ., செயலாளர்கள் வி. பி. பழனிசாமி, எஸ். மகேந்திரன், தருமபுரி மாவட்ட தலைவர் சி.சிவன் உட்பட 27 மாவட்டங்களில் இருந்து பொதுக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயலாளர் எஸ்.தேவராசன் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் எஸ்.கலைச்செல்வம், ஏஐடியூசி தொழிற்சங்க மாவட்ட பொது செயலாளர் கே. மணி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
கூட்டத்தில் கீழ் காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
டிசம்பர் 1, 2, 3 தேதிகளில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டம். பாஜக தலைமையிலான மத்திய அரசு, ஊரக தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் சட்டபூர்வ வேலை பெறும் உரிமை அளித்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை நீக்கி விட்டு, விபி ஜி ராம்ஜி என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த புதிய திட்ட செலவுக்கான நிதியை இதுவரை முழுமையாக ஒதுக்கீடு செய்து வந்த மத்திய அரசு, தற்போது 60 சதவீத நிதியை மட்டுமே ஒதுக்கீடு செய்யும், மேலும் தேவையான 40 சதவீதம் நிதியை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.
இது தவிர வருகை பதிவு முறையில் கண்விழிப்படலம் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்படுகின்றது. இந்த விவசாய தொழிலாளர் விரோத சட்டத்தை நீக்கி விட்டு, முந்தைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை, மேலும் வலுப்படுத்தி வேலை பெறும் நாட்களை ஆண்டுக்கு 200 நாட்களாக உயர்த்தவும், குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.700 நிர்ணயித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் டிசம்பர் 01, 02, 03 தேதிகளில் நாடு முழுவதும் நடைபெறும் மறியல் போராட்டத்தை தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்தப் போராட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் குடும்பத்தோடு பங்கேற்பது என பொது குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேகதாது அணை: கர்நாடக மாநில மக்களை தவறாக வழிநடத்தும் முதல்-அமைச்சருக்கு கண்டனம். சென்னை மாகாண அரசு மற்றும் மைசூர் சமஸ்தான அரசுகளுக்கு இடையே 1924 ஆம் ஆண்டில், காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டு புதுப்பித்து கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக கூறுகிறது. இது தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே பல சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றும், கர்நாடக மாநில அரசின் பிடிவாத போக்கின் காரணமாக புதிய ஒப்பந்தம் காணமுடியாத நெருக்கடி ஏற்பட்டது. இதனால், தமிழ்நாடு இயற்கை அமைப்பு முறையிலும், 1892 மற்றும் 1924 ஆண்டுகள் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் படியும் வழிவழியாக பெற்று வந்த தண்ணீர் உரிமையை நிலைநாட்ட போராட வேண்டிய நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டது.
நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு, தேசிய முன்னணியின் மத்திய அரசு, 1956-ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையே நதிநீர் தாவாச் சட்டத்தின் படி, 1990 ஜூன் மாதம் நடுவர் மன்றம் அமைத்தது. மூன்று மூத்த நீதிபதிகள் கொண்ட, உச்ச நீதிமன்றத்திற்கு சமமான அதிகாரம் பெற்ற, காவிரி நதிநீர் பகிர்வு நடுவர் மன்றம் 17ஆண்டுகளுக்கு பிறகு இறுதித் தீர்ப்பு வழங்கியது.
இந்த இறுதி தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடுகள் செய்யப்பட்டது. இவைகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 11 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி தீர்ப்பு வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பு 2019 பிப்ரவரி மாதத்தில் அரசிதழில் வெளியிடப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் இறுதித் தீர்ப்பில் ஒவ்வொரு தண்ணீர் ஆண்டிலும் (ஜூன் முதல் மே வரையான 12 மாதங்கள்) கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு மாத வாரியாக வழங்க வேண்டிய தண்ணீர் அளவை நிர்ணயித்து தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மற்றும் நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் நீர் வளங்களை ஒழுங்குபடுத்தும் குழு ஆகியவை இந்திய அரசால் ஜூன் 1, 2018 அன்று அமைக்கப்பட்டது. இந்த சட்டப்பூர்வ அமைப்புகளின் உத்தரவுகளை கர்நாடகா அரசு தொடர்ந்து அலட்சிய படுத்தி வருகிறது.
இந்த நிலையில், மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டம் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பு, ஹெல்சிங்கி நதிநீர் பகிர்வு கோட்பாடுகள் என அனைத்துக்கும் எதிரானது என்பதுடன், இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவுகளை சீர்குலைத்து, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான கோட்டாட்சி கோட்பாடுகளை தகர்க்கும் ஆபத்தான அணுகுமுறையாகும் என்பதை கர்நாடக மக்களுக்கு எடுத்து கூற வேண்டிய கர்நாடக மாநில முதல்-மந்திரி, அம்மாநில மக்களை தவறாக வழி நடத்தி வருவதை தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் பொது குழு கூட்டம் கண்டிப்பதுடன், தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமையை மதித்து, மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட்டு, இரு மாநில மக்களுக்கு இடையிலான நல்லுறவை வலுப்படுத்த முன் வர வேண்டும் என கர்நாடக முதல்-மந்திரியை கேட்டு கொள்கிறது.
கண் விழிப்படலம் பதிவு வருகைப் பதிவேடு முறையை கைவிடுக!
புதிய விபி ஜி ராம்ஜி திட்டத்தில் வேலை செய்யும்
தொழிலாளர்களின் கண்விழிப்படலம் பதிவு செய்து வருகை பதிவேடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அதி நவீன முறையில் பெரும்பாலான தொழிலாளர்கள் கண்விழிப்படலம், கை ரேகை உட்பட எதுவும் முறையாக பதிவாகாத காரணத்தால், அன்றாடம் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளிலும், மலை சார்ந்த வனக் கிராமங்களிலும் இணைய வலைத் தொடர்பு இணைப்பு கிடைக்காத நிலையிலும், மிக மெலிதான தொடர்பும் நவீன முறை வருகை பதிவேடு முறைக்கு உகந்த முறையில் இல்லை என்பதை கருத்தில் கொண்டு, நேரடி வருகை பதிவேடு முறையில் தொழிலாளர்களை வேலைக்கு அனுமதிக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் பொது குழு கூட்டம் மத்திய, மாநில அரசுகளை கேட்டு கொள்கிறது.
வசிப்பிட உரிமைக்கு முன்னுரிமை தருக!
அரசியலமைப்பு சட்டம் வாழும் உரிமையின் ஒரு பகுதியாக வசிப்பிட உரிமையும் அடிப்படை உரிமையில் அடங்கும் என்பதை நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு பல தீர்ப்புகளில் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் கூறியுள்ளது. ஆனால், வசிப்பிட வசதிக்காக தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சிகளில் குடும்பத்திற்கு தலா 2.0 சென்ட் முதல் 2.5 சென்ட் வரையிலும், நகரப் பகுதிகளில் 1.25 சென்ட் முதல் 1.5 சென்ட் வரையிலும், மாநகர் பகுதிகளில் ஒரு சென்ட் என்ற அளவிலும் வீட்டு மனை நிலம் வழங்க வரம்பு நிர்ணயித்துள்ளது. இது எந்த வகையிலும் கண்ணியமான வாழ்வுக்கான சூழலை உருவாக்க உதவாது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ 7 லட்சமாக உயர்த்த வேண்டும்
வசிப்பிட வசதி அளித்தல் தொடர்பாக திட்டக் குழு முனைவர் டி.பந்தோபாத்யாய தலைமையில் அமைத்த வல்லுநர் குழு குடும்பத்திற்கு தலா 15 சென்ட் மனை நிலம் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. அது, மனை நிலம் என்பது வசிப்பிடம் மட்டுமல்ல; வாழ்வாதாரமாகவும் அமைய வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த வல்லுநர் குழு பரிந்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலித்து வீட்டுமனை நில அளவை உயர்த்த வேண்டும் என கேட்டு கொள்வதுடன், இலவச மனைப்பட்டா பெறுவதற்கான தகுதிகளில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்பதை திருத்தி ஆண்டு வருமானம் ரூ 7 லட்சமாக உயர்த்த வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு அரசை கேட்டு கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.