

சென்னை,
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தொடர்மழை காரணமாக தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்டஅறிவிப்பில்,
தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு நவ.8 தொடங்கி நவம்பர் 12-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த தேர்வுக்கான அனைத்துவித ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்துவருகிறது. இதன்காரணமாக தள்ளிவைக்கப்பட்ட தமிழ், ஆங்கிலம் தேர்வுகள் மற்றும் நவ.10, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களின் தேர்வுகள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்றுதேதிகள் பின்னர் வெளியிடப்படும். கூடுதல் விவரங்களை தனித்தேர்வர்கள் தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.