பெண் குழந்தைகளுக்கு எதிராகத் தொடரும் பாலியல் வன்கொடுமை: வேடிக்கை பார்க்கும் அரசு - ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

தமிழ்நாடே குற்ற பூமியாக மாறியுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஆர்.பி.உதயகுமார்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை, மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல, பொய்க்கால் குதிரை அரசு அமைந்து ஒரு மாதம் முடிவடையும் நிலையிலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பது கண்டு மக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

கடந்த திமுக ஆட்சியில் 6 வயது குழந்தை முதல் 80 வயது பாட்டி வரை உள்ள பெண்கள் பாதிப்புக்குள்ளானார்கள். ஆனால், தற்போது 3 வயது பெண் குழந்தையைக்கூட சீரழிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்றவாறு உள்ளன. ஓரிரு நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 3 வயது மற்றும் 12 வயது பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை கேட்போர் மனதை வேதனைக்குள்ளாக்கி உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்கொடுமைகள் ஒருசிலவற்றில் ஆளும் கட்சியினரே ஈடுபட்டுள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

  • தூத்துக்குடி அருகே த.வெ.க. நிர்வாகிகளால் இளம்பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை.

  • திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து அவருடைய நகை பறிப்பு.

  • மதுரை, திருமங்கலத்தில் 13 வயது சிறுமி, நான்கு சிறுவர்களால் (மூவர் 16 வயது, ஒருவர் 13 வயது) பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அவலம்.

  • கோவை, சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி படுகொலை.

என தமிழ்நாடே குற்ற பூமியாக மாறியுள்ளது. ஆனால், இதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டிய முதல்-அமைச்சரோ சினிமா வசனங்களைப் பேசிக்கொண்டிருக்கிறார். ஓரிரு நாட்களுக்கு முன்பு திருச்சியில் நன்றி அறிவிக்கும் கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் விஜய், எங்கள் மீது நாலுகால் பாய்ச்சல் காட்டியிருப்பது அவரது தகுதியையும், தரத்தையும் உணர்த்துகிறது.

பொதுவாக இளைஞர்கள் தங்களது எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய படிப்பு, அவற்றை அடைவதற்கான வழிமுறைகள், பெரியவர்களை மதித்தல், போன்றவைகளுக்கு வழிகாட்ட வேண்டிய முதல்-அமைச்சர், போகாத ஊருக்கு வழிகாட்டும் வேலையை நடத்திக்கொண்டிருப்பது வெட்கக்கேடான ஒன்றாகும். ஒரு தலைமுறை பாழாகும் சூழ்நிலை தற்போதைய ஆட்சியாளர்களால் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஒவ்வொரு பெற்றோர்களின் மனதிலும் எழுந்துள்ளது. முடிந்தால் இளைய சமுதாயத்தினரை இந்த அரசு நல்வழிப்படுத்தும் பணிகளில் இதய சுத்தியோடு ஈடுபட வேண்டும். தவறினால் தமிழ் சமுதாயம் இந்த ஆட்சியாளர்களையும், ஆட்சியை வழிநடத்துபவர்களையும் மன்னிக்காது என்று எச்சரிக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com