

கொரோனா நோய்த்தொற்று
கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல இடங்களில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சை பெறுவதற்காக மக்கள் அங்கும் இங்குமாக அல்லாடி வருகின்றனர். அரசும் அதற்கேற்றாற்போல் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை பல இடங்களில் ஏற்படுத்திவருகிறது.கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் இடம் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருவது ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் கொரோனாவால் உயிரிழந்தவர்களை கல்லறை தோட்டங்களில் அடக்கம் செய்வதற்கு இடம்
இல்லாத அவலமும் சென்னையில் இருப்பதாக வரும் தகவல்கள் வேதனையில் ஆழ்த்துகின்றன.
கல்லறை தோட்டங்களில் இடம் இல்லை
சென்னையில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை புதைப்பது நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாகவும், இதனால் அங்கு இடம் இல்லாத சூழல் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.சென்னையைப் பொறுத்தவரையில் மெட்ராஸ் கல்லறை வாரிய அறக்கட்டளை 13 கல்லறை தோட்டங்களை நிர்வகித்துவந்த நிலையில், தற்போது கீழ்ப்பாக்கம் மற்றும் காசிமேட்டில் உள்ள கல்லறை தோட்டங்களை மட்டுமே நிர்வகித்து வருகிறது. மற்ற கல்லறை தோட்டங்கள், அந்தந்த திருச்சபைகள் வாயிலாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கீழ்ப்பாக்கம், காசிமேடு, கியூபிள் தீவு, செயின்ட் மேரீஸ் கல்லறை தோட்டங்களில், தற்போது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இடம் இல்லாமல் திணறுவதாக, அடக்கத்துக்கு உடலை கொண்டு சென்று திரும்பியவர்கள் வேதனையோடு கூறுகின்றனர்.
கிறிஸ்தவர்கள் வேதனை
பொதுவாக கிறிஸ்தவர்களின் மரபுப்படி, நீ மண்ணாய் இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய் என்று பைபிளில் கூறியிருப்பது போல, இறந்தவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது அதன்படி அடக்கம் செய்ய முடிவதில்லை என்று கிறிஸ்தவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதுதொடர்பாக வேளச்சேரியை சேர்ந்த ஜெய்கர் சாமுவேல் கூறுகையில், என்னுடைய உறவினர் கொரோனாவால் இறந்துபோனார். அவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக மந்தைவெளி, காசிமேட்டில் உள்ள கல்லறை தோட்டங்களை அணுகினோம். ஆனால் இடம் இல்லை என்று தெரிவித்துவிட்டனர். காசிமேட்டில், உடலை எரித்து சாம்பலாக கொண்டு வாருங்கள், அடக்கம் செய்கிறோம் என்று தெரிவித்தனர். கிறிஸ்தவர்களை பொறுத்தவரையில் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்வதுதான் வழக்கம். அது மீறப்படும் நிலை வருத்தம் அளிக்கிறது. எனவே நல்லடக்கம் செய்வதற்கு ஏதாவது ஒரு இடத்தை அரசு ஒதுக்கித் தரவேண்டும் என்பதே கிறிஸ்தவர்களின் வேண்டுகோள் என்றார்.
புண்படுத்த விரும்பவில்லை
இதுகுறித்து ஒரு பாதிரியார் கூறுகையில், மேற்கத்திய நாடுகளில்கூட உடல்கள் அடக்கம் செய்யப்படாமல் எரிக்கப்பட்டு, அந்த சாம்பல்தான் புதைக்கப்படுகிறது. ஆனால் தற்போதைய சூழலில், கொரோனா தொற்றால் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினரிடம் இதை பரிந்துரை செய்து அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்த விரும்பவில்லை என்றார்.