தொடர் விடுமுறை: குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்

மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் மிதமாக தண்ணீர் வருகிறது.
தொடர் விடுமுறை: குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்
Published on: 

தென்காசி,

குற்றால சீசன் ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நீடிக்கும். சில சமயங்களில் செப்டம்பர் மாதம் வரை இருக்கும். அக்டோபர் மாதம் தொடங்கி மழைக்கு ஏற்ப நீடிக்கும். தென்மேற்கு பருவமழை கைகொடுக்காததால் குற்றால அருவிகளில் கடந்த 3 மாதங்களாக சீசன் பெரிய அளவில் களைகட்டவில்லை. பல நாட்களில் குறைவாகவே தண்ணீர் விழுந்தது. தண்ணீர் வரத்து சில நாட்களில் அதிகரிக்கும் அப்போது சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக சீசன் காலத்தில் போதிய மழை பெய்யாததால், தண்ணீர் வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது.

இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து சீராக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகளுக்கு தற்போது சீராக தண்ணீர் வரத்து உள்ளது.

இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் களைகட்டியுள்ளது. மிதமாக வரும் தண்ணீரில் மக்கள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் மிதமாக தண்ணீர் வருகிறது. தொடர் விடுமுறை என்பதால், அடுத்தடுத்த நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com