தொடர் மழை: தமிழகத்தில் 1,500 ஏரிகள் முழுமையாக நிரம்பின..!

வட மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யாததால் ஏரிகள் நிரம்பாமல் உள்ளன.
தொடர் மழை: தமிழகத்தில் 1,500 ஏரிகள் முழுமையாக நிரம்பின..!
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு இன்னும் பெய்யவில்லை. அக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை 44 செ.மீ. அளவுக்கு மழை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 35 செ.மீ. அளவுக்குத்தான் மழை பெய்துள்ளது. அதாவது 6 சதவீதம் குறைவாக உள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ஏரி, குளங்கள் இன்னும் முழுமையாக நிரம்பவில்லை.

தமிழ்நாட்டில் மொத்தம் 14,139 ஏரிகள் உள்ளன. இவற்றில் 1,500 ஏரிகள் மட்டும்தான் 100 சதவீதம் முழுமையாக நிரம்பி உள்ளன. 2 ஆயிரம் ஏரிகள் 75 சதவீதம் அளவுக்குதான் நிரம்பி இருக்கின்றன. இதுதவிர 2 ஆயிரம் ஏரிகள் 50 சதவீதமும், 3 ஆயிரம் ஏரிகள் 25 சதவீதமும் நிரப்பி உள்ளன.

கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்த காரணத்தால் இந்த மாவட்டங்களில் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன. ஆனால் வட மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யாததால் இன்னும் ஏரிகள் நிரம்பாமல்தான் உள்ளன.

இந்த மாதம் (டிசம்பர்) மழை காலம் என்பதால் இந்த மாதத்தில் ஓரளவு மழை பெய்தால் ஏரிகள் இன்னும் நிரம்ப வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com