நெல்லையில் தொடர் மழை.. மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு

மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.
நெல்லையில் தொடர் மழை.. மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 7 அடி அதிகரித்து 64.30 அடியாக உயர்ந்தது. அங்கு 46 மில்லிமீட்டர் மழை பதிவானது. அணைக்கு தண்ணீர்வரத்து வினாடிக்கு 4,373 கனஅடியாகவும், வெளியேற்றம் 200 கனஅடியாகவும் உள்ளது.

இதேபோல் 72.34 அடியாக இருந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் சுமார் 13 அடி உயர்ந்து 85.46 அடியாக உள்ளது. அங்கு 26 மில்லிமீட்டர் மழை பதிவானது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85.52 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 802 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கு 25 மில்லி மீட்டர் மழைபதிவாகி உள்ளது.

இதேபோல் மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியிலும் நேற்று பலத்த மழை பெய்து வருகிறது. நாலுமுக்கு பகுதியில் அதிகபட்சமாக 72 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 67 மில்லி மீட்டரும், காக்காச்சி முக்கு பகுதியில் 47 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 26 மில்லி மீட்டரும் மழை பதிவானது. தொடர் மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து 3-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com