

கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, குடியிருப்புகளை நீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் கிராமங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன.
தொடர் புயல் மற்றும் வெப்பசலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மழையால் முக்கிய ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ளை அபாய எச்சரிக்கை தொடர்கிறது. ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பன்றிக்கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு கிராமங்களுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கயிறு கட்டி பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர்.
தொடர் மழையால் முக்கடல் அணை ஒரே நாளில் பத்து அடி உயர்ந்து முழு கொள்ளளவான 25 அடியை எட்டியது. மாவட்டத்தில் பல இடங்களில் மின்சாரம் தடை செய்யபட்டு உள்ளதால் பல கிராமங்கள் இருளில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.
தடிக்காரகோணம் ஊராட்சிக்குட்பட்ட கீரிப்பாரையில் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் ரப்பர் தொழிற்சாலைக்குச் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. வடக்கு தாமரை குளம் - பறக்கை சாலை பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்கிருந்த பாலத்தின் அடியில் ஆகாயத்தாமரைச் செடிகள் சிக்கிக் கொண்டன. உடனடியாக அவை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தொடர் மழையால், வாழைத்தோட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தாமிரபரணி, கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1, சிற்றார் 2 அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கோதையாற்றில் பாயும் வெள்ளம், திற்பரப்பு அருவியை முற்றிலும் மூழ்கடித்துள்ளது.
தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள திக்குறிச்சி, குழித்துறை, மங்காடு, பரக்காணி, முஞ்சிறை, பார்திவபுரம், வைக்கலூர் போன்ற தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளிலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 43.18 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு நான்காயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு எட்டாயிரத்தி முன்னூறு கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 585 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.