

நெல்லை,
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பாபநாசம், மணிமுத்தாறு, மூலைக்கரைப்பட்டி, நெல்லை, பாளையங்கோட்டை, தென்காசி, செங்கோட்டை, சிவகிரி, கடையம், ராமநதி, கடனாநதி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது நெல்லை மாநகர பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று காலை முதலே நெல்லை டவுன், பேட்டை, வண்ணார் பேட்டை, பாளையங்கோட்டை சமாதானபுரம், சந்திப்பு உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 80.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 833.55 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 654.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 93.21 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 73.15 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 141 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 25 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே சாகுபடி பணிக்காக பாபநாசம் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வேளாண் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.