ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும்

தஞ்சை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம், தூய்மை பணியாளர்கள் மனு அளித்தனர்.
ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும்
Published on

தஞ்சை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம், தூய்மை பணியாளர்கள் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

அப்போது, தஞ்சை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், மாநகர தூய்மை பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில், மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

ஒப்பந்த தொழிலாளர்கள்

கடந்த 2002-ம் ஆண்டு முதல், தஞ்சை நகராட்சியாக இருந்த காலத்திலிருந்து ஒப்பந்த நிறுவனங்கள் சார்பில், துய்மை பணியாளர்களாக 250 பேர் பணியாற்றி வருகிறோம். கடந்த 2002 2003-ம் ஆண்டு, ஒரு ஒப்பந்தகாரரும், 2004 2005-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தகாரரும், 2006 முதல் 2016-ம் ஆண்டு வரை ஒரு ஒப்பந்தகாரரும், 2017-ம் ஆண்டு மார்ச்.1-ந் தேதி முதல் 2020-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி வரையும், 2020 2021 ஒரு ஒப்பந்தகாரருக்கும் ஒப்பந்தம் மாறி, மாறி வழங்கப்பட்டது. இதன் மூலம் எங்களை ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே வைத்துள்ளனர்.

கடந்த 2021-ம் ஆண்டு செப்.7-ந் தேதி தினக்கூலியில் இருந்து திறன் பெறாத தொழிலாளர்கள் என மாற்றம் செய்து ரூ.429 சம்பளம் வழங்கப்பட்டது. 2022-ம் ஆண்டு அக்.10-ந் தேதி முதல் ரூ.550 ஆக சம்பளம் உயர்த்தப்பட்டது. இதில் 5 நாட்கள் வரை பிடித்தம் செய்துகொள்ளுகின்றனர். எங்களுக்கான தினக்கூலியை ஒப்பந்த நிறுவனத்தின் மூலமாக மாநகராட்சி வழங்கி வருகிறது.

நிரந்தரம் செய்ய வேண்டும்

கடந்த 21 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் தற்காலிக தூய்மை பணியாளர்களாக நாங்கள் இருந்து வருகிறோம். எனவே எங்களை நிரந்தர பணியாளர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும். கலெக்டர் செயல் திறன் ஆணையின்படி தினக்கூலியை பிடித்தம் செய்யாமல் கூலியை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாதை அமைக்க வேண்டும்

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க தலைவர் முஹமது இப்ராஹிம் அளித்த மனுவில், திருவையாறு அருகே சிறுபுலியூர் கிராமத்தில், திங்களூர் வாய்க்கால் பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு இடுபொருள்கள், உழவு மற்றும் அறுவடை எந்திரங்கள் செல்ல வசதியாக, கரையில் உள்ள மரங்களை அகற்றி பாதை அமைத்து தர வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் தர்மராஜன் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில், பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஆகிய பகுதிகளில் உள்ள வாய்க்கால், ஆறு தலைப்புகளில் உள்ள ரெகுலேட்டர்கள் மற்றும் மதகுகள் பழுதடைந்துள்ளது. எனவே, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்குள்ளாக அனைத்து பணிகளையும் சீரமைக்க வேண்டும்.

தரமற்றபணிகள்

பாபநாசம் அருகே வடசருக்கை, குடிகாடு கிராமங்களில் மண்ணியாற்றில் கான்கிரீட் சுவர் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுகிறது. இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com