கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்: ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமலில் உள்ள சூழலில் பொதுமுடக்கத்தை பயன்படுத்தி, கட்டுமான பொருட்களின் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளதாக அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். 30 முதல் 40 சதவிகிதம் வரை பொருட்களில் விலை உயர்ந்துள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

முழு ஊரடங்கிற்கு முன்பு, ஒரு மூட்டை சிமென்ட் 370 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 520 ரூபாயாக அதிகரித்துள்ளது. எம் - சாண்ட் ஒரு யூனிட், 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

ஒன்றரை அங்குல ஜல்லி, ஒரு யூனிட் 3 ஆயிரத்து 400 ரூபாயில் இருந்து 3 ஆயிரத்து 900 ஆகவும், முக்கால் அங்குல ஜல்லி 3 ஆயிரத்து 600 ரூபாயில் இருந்து 4 ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கட்டுமானக் கம்பி ஒரு டன் 68 ஆயிரம் ரூபாயில் இருந்து 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதேபோல் செங்கல் ஒரு லோடு 18 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 24 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

அனைத்து கட்டுமானப் பொருட்களின் விலையும் 40 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதால் கட்டுமான பணிகள் தேக்கம் அடைந்துள்ளதாக பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அரசு சார்பில் சலுகை விலையில் கட்டுமான பொருட்களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிட வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com