சிபிஎஸ்இ தேர்வில் சர்ச்சை கேள்வி இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது - டி.டி.வி.தினகரன்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான கேள்வி இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ தேர்வில் சர்ச்சை கேள்வி இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது - டி.டி.வி.தினகரன்
Published on

சென்னை,

சிபிஎஸ்இ கல்வி முறையில் பயிலும் 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் முதலாம் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், டிசம்பர் 11ம் தேதி(சனிக்கிழமை) நடைபெற்ற 10ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில், பெண் வெறுப்பு தொடர்பான சர்ச்சைக்குரிய வாக்கியங்கள் ஒரு வினாவாக கேட்கப்பட்டிருந்தது கண்டனத்தை பெற்றுள்ளது. அந்த வினாவில் பிற்போக்கான பெண் வெறுப்பு சம்பந்தப்பட்ட கருத்துக்கள் இடம்பெற்றது.

இத்தகைய கருத்துக்கள் பள்ளி மாணவர்களின் கேள்வித்தாளில் கேட்கப்பட்டிருந்தது ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டாக்கியுள்ளது. மேலும் இது குறித்து பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது சம்பவம் குறித்து அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் டுவிட்டர் பதிவில் கூறுகையில்,

சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வு ஆங்கில வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கருத்துகளைக் கொண்ட கேள்வி இடம் பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

வளர் இளம் பருவத்தில் இருக்கும் மாணவச் செல்வங்களின் மனதில் எதற்காக இத்தகைய சிந்தனைகளை விதைக்க வேண்டும்? பெண் குழந்தைகளை இழிவுப்படுத்தும் கருத்துகள் வினாத்தாளில் இடம்பெற்றதற்காக சி.பி.எஸ்.இ வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் சி.பி.எஸ்.இ பாடப்புத்தகங்கள் மற்றும் வினாத்தாள்களில் அடிக்கடி இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெறுவதைத் தடுக்க அதன் நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை பொறுப்போடு செய்திட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com