தமிழக அமைச்சர் நேரு பற்றி சர்ச்சை பேச்சு; பா.ஜ.க. நிர்வாகி சூரியா சிவா மீது போலீசில் புகார்

தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பற்றி சர்ச்சையாக பேசியதற்காக பா.ஜ.க. நிர்வாகி சூரியா சிவா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அமைச்சர் நேரு பற்றி சர்ச்சை பேச்சு; பா.ஜ.க. நிர்வாகி சூரியா சிவா மீது போலீசில் புகார்
Published on

திருச்சி,

தி.மு.க.வின் மூத்த தலைவர் மற்றும் நாடாளுமன்ற மேலவை எம்.பி.யாக இருப்பவர் திருச்சி சிவா. இவரது மகன் மற்றும் தற்போது தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி அணி மாநில செயலாளராக பதவியில் உள்ள சூர்யா சிவா, தனியார் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேருவை விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

அமைச்சரின் மறைந்த தம்பி ராமஜெயம் குறித்தும் பல விமர்சனங்களை வெளியிட்டார். அதில், மறைந்த தொழிலதிபர் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கு தற்போது விசாரணையில் இருந்தாலும் குற்றவாளிகளை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது என்றும் கொலை செய்தவரை கண்டுபிடித்து தண்டனை வாங்கி தரும் அளவிற்கு ராமஜெயம் தியாகி அல்ல என்றும் பேசியுள்ளார்.

மேலும் மறைந்த ராமஜெயம் அடாவடித்தனம் நிறைந்தவர் என்றும் அவர்களுடைய வளர்ச்சியில் தான் தற்போது அமைச்சர் கே.என். நேரு வாழ்ந்து வருகிறார் என்றும் பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து திருச்சி மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் மத்திய மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அதில், தன்னிடம் பணியாற்றிய கார் ஓட்டுனருக்கு முறையான சம்பளம் வழங்காமல் அதை கேட்க சென்றவரை கொலை செய்ய முயன்றார் என ஏற்கனவே அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தும், தற்போது மீண்டும் இப்படி சர்ச்சைக்குரிய பேச்சை வெளியிட்டு இருப்பது சட்டம் மற்றும் ஒழுங்கை பாதிக்கும் நிலையாக இருக்கின்றது. எனவே, பா.ஜ.க. பிரமுகர் சூர்யா சிவா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com