

ஊட்டி,
மலைகளின் அரசியான ஊட்டிக்கு தமிழக மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஐரோப்பிய நாட்டு காலநிலை நிலவுவதால் ஐரோப்பிய நாட்டில் தாவரங்கள் மட்டுமின்றி அங்கு விளையும் மேஜிக் காளான் எனப்படும் போதை தரும் ஒரு வகையான காளான்களும் இங்கு விளைகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக இந்த போதை காளான்கள் விளையும் பகுதிகளை தேடி கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் அழைகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவர் ஒருவர் இளம் பெண்ணுடன் இந்த போதை காளான் சாப்பிட்டு மது குடித்ததில் அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனாலும் சமூக வலைதளங்கள் மூலமாக இந்த போதை காளானை தேடி ஒரு கூட்டம் எப்போதும் சுற்றி வருகிறது.
இந்த நிலையில் ஊட்டியில் போதை காளான் இருப்பதாக கோவையைச் சேர்ந்த ஒருவர். இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்து அந்த காளான் எங்கு உள்ளது என பலரும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிலர் அந்த காளான் கிடைக்கும் இடத்தை தேடி நேரடியாக வந்து சென்றதாக கூறப்படுகிறது. எனவே இன்ஸ்டாகிரா மில் வீடியோ வெளியிட்டவர் குறித்து விசாரணை நடத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
மேஜிக் மஷ்ரூம் எனப்படும் போதை காளான்களை நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தேடி அலையும் இளைஞர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போதையில் புதுமையை தேடுகிறோம் என்கிற பெயரில் ஆபத்து நிறைந்த காடுகளில் இயற்கையாக முளைக்கும் குறிப்பிட்ட சில காளான் வகைகளை தேடிக் கண்டுபிடித்து உட்கொண்டு வருகின்றனர்.
நச்சுத்தன்மை வாய்ந்த போதை காளான்களால் ஒவ்வாமை, மூச்சுத்திணறல், மரணம் வரை ஏற்பட்டாலும் அது குறித்து எந்தவித கவலையுமின்றி போதைக் காளான்களை பயன்படுத்தி வருகின்றனர். மனஅழுத்தம், உடல்வலி போன்றவற்றைக்கு மருந்தாக வெளிநாடுகளில் பயன்படுத்துவார்கள். இந்த காளானை சாப்பிட்டால், 8 மணி நேரம் வரை போதை இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதனை தாண்டி ரத்த ஓட்டம் அதிகரித்து, மாரடைப்பு வரவும் வாய்ப்பு உள்ளது. சுற்றுச்சூழல் சங்கிலி பாது காப்பில் இந்த காளான்களுக்கும் பங்கு உள்ளது இதனை அழிப்பதால் மற்றொரு உயிரினம் பாதிக்கப்படும். பயன்படுத்துபவர்களுக்கு உயிர் இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றனர்.