முதல்-அமைச்சருக்கு அரோகராவா? இது ஆணவத்தின் உச்சம் - கீதா ஜீவன் கண்டனம்

சூரசம்ஹார நிகழ்வில் முருக பக்தர்களுக்கு ஒரு துளி மரியாதை கூட தவெக அரசு வழங்கவில்லை என கீதா ஜீவன் கூறியுள்ளார்.
ஆணவத்தின் உச்சம், அழிவு நிச்சயம் - கீதா ஜீவன்
Published on: 

தூத்துக்குடி,

முதல்-அமைச்சருக்கு,அமைச்சருக்கு அரோகரா என்பதெல்லாம் ஆணவத்தின் உச்சம். அழிவு நிச்சயம் என திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.

சூரசம்ஹார நிகழ்வில் தவெக வினரின் செயலைக் கண்டித்து தூத்துக்குடியில், திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

நேற்றைய தினத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூரில் கந்த சஷ்டியை முன்னிட்டு நடைபெற்ற அந்தச் சூரசம்ஹாரத்தில் தமிழ் கடவுளான முருகருக்கு, "அரோகரா, கந்தனுக்கு அரோகரா" என்றுதான் கோஷங்கள் எழுப்பப்படும். முருகருக்கு சரணம் என்ற முறையில் அர்த்தத்தைக் கொள்ளக்கூடிய அந்த அரோகரா என்ற கோஷம் எழுப்பப்படும்.

ஆனால், இந்த ஆண்டு முதல்-அமைச்சருக்கு அரோகரா, அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என்று வரலாற்றிலேயே இதுவரைக்கும் இல்லாத வகையில் நடந்துள்ளது, எனக்கும் வயது 55 ஆகிவிட்டது, இதுவரைக்கும் அப்படி ஒரு கோஷம் அங்கு போட்டதாகச் சரித்திரமே கிடையாது.

ஆகவே, ஒரு புதிய கலாசாரம் இந்த த.வெ.க ஆட்சியினால் உருவாக்கப்பட்டுள்ளது. இதை வன்மையாக எல்லா பக்தர்களும் கண்டிக்கிறார்கள். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஆறு நாளும் விரதம் இருந்து, அந்த ஆலயத்தில் ஒவ்வொரு தூணிலும் இடம் கிடைப்பதற்கு அவ்வளவு சிரமப்படுவாங்க. ஒருத்தர் ஆறு நாள் அங்க எத்தனை பெரிய பெரிய கோடீஸ்வரர்களாக இருந்தாலும், தொழிலதிபர்களாக இருந்தாலும், அந்தத் தூணில் போய் ஆறு நாளும் விரதம் இருந்து, அவருடைய முருகனுடைய அருளைப் பெற வேண்டும் என்பதற்காக, அப்படி ஒரு பக்தியுடன் இருப்பாங்க.

முருகன், தமிழ் கடவுள். இந்தச் சூரசம்ஹாரத்துக்குப் பின்புதான் அவர்கள் உணவு சாப்பிடுவாங்க. அப்படி ஒரு பக்தி. கோடிக்கணக்கான பக்தர்கள் வருகின்ற இடம் அந்த இடம். அந்த இடத்தில் இப்படி ஒரு புதிய கலாசாரத்தை உருவாக்குவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

எல்லா பக்தர்களும் முகம் சுளித்தார்கள். ஏன்னா, இறைவனுக்குச் சமமாகத் தங்களுடைய கட்சித் தலைவரையும் அமைச்சரையும் பேசுவது என்பது அபத்தமானது. நிச்சயமாக இது ஆணவத்தின் உச்சம். இதை வன்மையாகக் கண்டிக்கணும்.

இன்னொன்று பார்த்தீங்கன்னா, யாருக்கும் பாஸே கொடுக்கல. இதுவரைக்கும், ஏன்னா, 75 வயதுக்காரங்களா இருப்பாங்க. அவங்கள்லாம் நடந்து போக முடியாது. முன்னூட்டியே அங்க போய் உட்கார்ந்துருவாங்க. அவர்களுக்கெல்லாம் இன்னைக்கு அந்த மாதிரி ஆன்மீகத்தில் இருக்கிற நிறைய பேருக்கு உள்ளே நுழையக்கூட முடியல.

ஏன், முன்னாள் கவர்னராக இருந்த தமிழிசை அம்மா கூட உள்ளே போக முடியல. ஆனா, அவங்க த.வெ.க கட்சிக்காரங்க இருக்காங்க. அறநிலையத்துறை அமைச்சரெல்லாம் உள்ளே போயிருக்காரு. அப்ப நீங்க உங்க கட்சிக்கு மட்டும் அந்த முக்கியத்துவம் கொடுக்கிறீங்க. நீங்க பக்த கோடிகளுக்குக்கூட ஒரு துளி மரியாதை அங்க வழங்கப்படல. அப்படி ஒரு அபத்தமான செயல் எல்லோராலும் வணங்கப்படுகிற இந்தத் திருச்செந்தூர் முருகனுடைய சன்னிதானத்தில் நடப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நிச்சயமாக இது ஆணவத்தின் உச்சம். அழிவு நிச்சயம்.

"அரோகரா முதலமைச்சருக்கு" என்று சொன்னவர் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கணும். எங்கு தவறு நடந்தது? ஏன் இந்த ஆணவத்தின் உச்சத்தில் இருக்கறாங்க? ஏன் அறநிலையத்துறை அமைச்சர் அவர் மட்டும் போறாரு? எல்லாருக்கும் அனுமதி கொடுக்கல? ஏன் இந்த முறை பாஸ் கொடுக்கல? ஏன் இந்தக் கோஷம் எழுப்பப்பட்டது என்பது குறித்து அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X