பெரியார் சிலை குறித்து சர்ச்சைப் பேச்சு: சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஜாமீன் கோரி கனல் கண்ணன் மனு தாக்கல்

பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சினிமா சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணனை கடந்த 15-ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
பெரியார் சிலை குறித்து சர்ச்சைப் பேச்சு: சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஜாமீன் கோரி கனல் கண்ணன் மனு தாக்கல்
Published on

சென்னை,

இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் கடந்த1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளர் கனல் கண்ணன் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதரின் கோவிலில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் சாமிதரிசனம் செய்கின்றனர். ஆனால், கோவிலுக்கு எதிரே கடவுளே இல்லை என்று கூறியவரின் சிலை (பெரியார் சிலை) என்று உடைக்கப்படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள்' என்று கூறினார்.

இதனிடையே, பெரியார் சிலை உடைப்பது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக கனல் கண்ணன் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் அவரது முன் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி தள்ளுபடி செய்த நிலையில், புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை ஆகஸ்ட் 15-ம் தேதியன்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஜாமீன் கோரி சினிமா சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் எழும்பூர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி கிரிஜா ராணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவித்து, புகார்தாரர் (த.பெ.தி.க.) மாவட்ட செயலாளர் குமரன் இடையீட்டு மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து இரு மனுக்களையும் நாளை விசாரிப்பதாக நீதிபதி கிரிஜா ராணி தெரிவித்தார். அதன்படி மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com