ராஜராஜசோழன் பற்றி சர்ச்சை பேச்சு; மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பா. ரஞ்சித்திற்கு முன்ஜாமீன்

ராஜராஜசோழன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குனர் பா. ரஞ்சித்திற்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
ராஜராஜசோழன் பற்றி சர்ச்சை பேச்சு; மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பா. ரஞ்சித்திற்கு முன்ஜாமீன்
Published on

மதுரை,

மன்னர் ராஜராஜசோழன் குறித்து விமர்சித்த விவகாரம் தொடர்பாக அளித்த புகாரின்பேரில் சினிமா டைரக்டர் பா.ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கோரி டைரக்டர் பா.ரஞ்சித், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு ராஜராஜசோழன் குறித்து விமர்சனம் செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியதுடன், டைரக்டர் ரஞ்சித் மீதான வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்யவும் போலீசாருக்கு உத்தரவிட்டது.

இந்தநிலையில், அந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வாதாட அட்வகேட் ஜெனரல் ஆஜராக உள்ளார். இதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை இன்று ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே திருப்பனந்தாள் போலீசார் தன் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று பா.ரஞ்சித் மற்றொரு மனுவை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், நான் ஒரு இந்திய குடிமகன். இந்திய அரசியலமைப்பு சட்டம் 19 (1)வது பிரிவின்படி பேச்சுரிமை எனக்கு உள்ளது. ஆனால் இதை கருத்தில் கொள்ளாமலும், முதல்கட்ட விசாரணையை மேற்கொள்ளாமலும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எனது பேச்சு மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை. எனவே என் மீது பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

அந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், பா.ரஞ்சித் பேசியது தொடர்பான குறிப்புகள் தமிழக அரசு வெளியிட்ட புத்தகம் ஒன்றில் இருக்கிறது. மனுதாரர் பொதுக்கூட்டத்தில் பேசிய சில நாட்கள் கழித்துதான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மனுதாரருக்கு இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பேச்சுரிமை உள்ளது. எனவே மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.

அதற்கு நீதிபதி, பேச்சுரிமை உள்ளதென்றாலும் அதற்கு வரம்பில்லையா? என கேள்வி எழுப்பினார். மேலும் நீதிபதி தெரிவிக்கையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள புத்தகத்தில், பயிர் செய்வோர் தங்கள் நிலத்தை சொந்தமாக வைத்துக்கொள்ளலாம் எனவும், பயிர் செய்யாதவர்கள் தங்கள் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என ராஜராஜ சோழன் காலத்தில் ஒரு அறிவிப்பு இருந்ததாக மட்டுமே கூறப்பட்டுள்ளது. ராஜராஜ சோழன், ஆதிதிராவிட மக்களின் நிலங்களை கையகப்படுத்தினார் என்பதற்கு ஆதாரம் எங்கு இருக்கிறது? எந்த நோக்கத்தில் மனுதாரர் இவ்வாறு பேசியுள்ளார்? எனவும் கேள்வி எழுப்பினார்.

விசாரணை முடிவில், பா.ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஆதாரங்கள், ஆவணங்களுடன் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய தஞ்சை திருப்பனந்தாள் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை ஜூலை 8ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

இந்நிலையில், ராஜராஜசோழன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் முன்ஜாமீன் கோரிய இயக்குனர் பா. ரஞ்சித்தின் மனு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது. இனி வருங்காலங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேச கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com