

ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக ஜூன் முதல் செப்டம்பர் வரை தென் மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையும், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழையும் பெய்யும். இதன்படி தென்மேற்கு பருவமழை 750 மில்லி மீட்டரும், வடகிழக்கு பருவமழை 300 மில்லி மீட்டரும், கோடை மழை 212 மில்லி மீட்டரும் பெய்யும். ஆனால் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. அதேபோல் இந்த ஆண்டு கோடை மழையும் வழக்கத்தை விட 31 சதவீதம் குறைவாகவே பெய்தது.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கும். இந்த ஆண்டு முன்கூட்டியே மே கடைசி வாரத்தில் தொடங்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. ஆனால் வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புக்கு மாறாக மீண்டும், தென்மேற்கு பருவமழை தள்ளி வழக்கத்தை விட ஒரு வாரம் தாமதமாக தொடங்கியுள்ளது. கேரளம் மாநிலத்தில் தொடங்கியதில் இருந்து அடுத்த 2 நாட்களில் தமிழகத்திலும் தென் மேற்கு பருவமழை வழக்கமாக ஆரம்பிக்கும். கேரளத்தில் 4-ந் தேதி தொடங்கிய தென் மேற்கு பருவமழை, நேற்று முதல் நீலகிரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வருகிறது.
ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான இத்தலார், எமரால்டு, நஞ்சநாடு, கப்பத்தொரை. முத்தொரை பாலாடா, பிங்கர்போஸ்ட் என சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நேற்று காலை 2 மணி நேரம் மழை பெய்தது. மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் அறிகுறியாக ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் உள்ளூர் வாசிகள் அவதிப்பட்டனர். வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி செல்கின்றனர். ஊட்டியில் மழை பெய்து வருவதால் கடுங்குளிர் நிலவ தொடங்கி உள்ளது.
இதற்கிடையே மே மாதம் தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பம் நிலவியதால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. தற்போது வெயில் குறைந்து மழை தொடங்கி விட்டதாலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறந்துவிட்டதாலும் சுற்றுலா பயணிகள் வருகை படிப்படியாக குறைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று ஊட்டியில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் குளுகுளு காலநிலை நிலவியது. இதனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குடைகளுடனும், மழை கோட் அணிந்தும் சுற்றுலா தலங்களில் குவிந்தனர். சிலர் குளுகுளு கால நிலையை அனுபவித்தவாறு செல்பி எடுத்து உற்சாகம் அடைந்தனர்.