குன்னூர் சுற்றுலா பஸ் விபத்து - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு..!

குன்னூரில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
குன்னூர் சுற்றுலா பஸ் விபத்து - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு..!
Published on

குன்னூர்,

தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று காலை பஸ்சில் 61 பேர் சுற்றுலா வந்தனர். அவர்கள், அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துவிட்டு, நேற்று மாலை கோவைக்கு புறப்பட்டனர். மாலை 5.30 மணியளவில் ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் பஸ் வந்து கொண்டு இருந்தது.

மரப்பாலம் அருகே 9-வது கொண்டை ஊசி வளைவில் பஸ் திரும்பியபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து அந்த பஸ், சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி அபய குரல் எழுப்பினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், மீட்பு பணியை துரிதப்படுத்தினர். சாலையில் இருந்து கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கிய தீயணைப்பு துறையினர் பஸ்சுக்குள் சிக்கி இருந்தவர்களை ஒவ்வொருவராக மீட்டு மேலே கொண்டு வந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்தனர். இவர்கள் தவிர 40-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குன்னூர் பஸ் விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து நடந்த இடத்தில் பஸ்சுக்கு அடியில் சிக்கியிருந்த பாண்டித்தாய் என்பவர் சலடமாக மீட்கப்பட்டதை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com