கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரி வழக்கு

கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடுகளை தடுக்க தேர்தல் நடைமுறைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரிய வழக்கில் அதிகாரி பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரி வழக்கு
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் 18 ஆயிரத்து 775 கூட்டுறவு சங்கங்களுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் 2-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்கள் சார்பில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

இதனை விசாரித்த ஐகோர்ட்டு, முறைகேடு தொடர்பான புகார்கள் மீது விசாரணை நடத்தி அந்த தேர்தலை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கூட்டுறவு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், அடுத்தடுத்து நடக்க உள்ள கூட்டுறவு சங்க தேர்தலை வெளிப்படையாக நடத்த உறுப்பினர்கள் பட்டியல், வாக்காளர்கள் பட்டியல், வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பட்டியல், நிராகரிக்கப்பட்டவர்களின் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கூட்டுறவு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரைச் சேர்ந்த அண்ணாமலை, குரம் கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், என்.ஷேசஷாயி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், இறந்தவர்களின் பெயர்களும் உறுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு சம்பந்தமாக கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 13-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com