

சேலம்,
சேலம் அம்மாபேட்டையில் உள்ள சேலம் கூட்டுறவு பயிற்சி நிறுவனத்தில் துணை முதல்வராக பணியாற்றி வருபவர் கருணாநிதி (வயது 56). இவருடைய மனைவி செல்வி (51). இவர், அம்மாபேட்டை போலீஸ் நிலையம் அருகே மருந்து கடை நடத்தி வருகிறார். தினமும் காலை 9.30 மணிக்கு கருணாநிதி அம்மாபேட்டையில் ரவுண்டானா அருகே உள்ள கூட்டுறவு பயிற்சி நிறுவனத்துக்கு பணிக்கு சென்று விடுவதுண்டு. மகன் விஜய் காலையில் வேலைக்கு புறப்பட்டு சென்று விடுவார். மருந்து கடை நடத்தி வரும் செல்வி, அனைவரும் புறப்பட்டு சென்ற பின்னர் வீட்டின் கதவு, வெளிப்புற கேட் ஆகியவற்றை பூட்டி விட்டு கடைக்கு சென்று விடுவார்.
65 பவுன் நகை கொள்ளை
பிற்பகல் 2 மணிக்கு சாப்பாட்டிற்காக செல்வி வீட்டிற்கு வந்து செல்வார். நேற்று வழக்கம்போல காலை மருந்து கடைக்கு சென்ற செல்வி, பிற்பகல் 2 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அவர் வீட்டின் மெயின் கிரீல் கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்ற போது பக்கவாட்டில் உள்ள கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டும், வீட்டின் மெயின் மரக்கதவின் லாக்கர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் இருந்த 65 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவர் அம்மாபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும்.
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். சேலம் கூட்டுறவு பயிற்சி நிறுவனத்தில் துணை முதல்வராக பணிபுரியும் கருணாநிதி, சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எம்.கே.செல்வராஜின் சகோதரர் ஆவார்.