ஒருங்கிணைப்பாளர்கள் பதவி: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீண்டும் தேர்வு இன்று முறைப்படி அறிவிப்பு வெளியாகிறது

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் மீண்டும் தேர்வாகின்றனர். முறைப்படி இன்று (திங்கட்கிழமை) அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
ஒருங்கிணைப்பாளர்கள் பதவி: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீண்டும் தேர்வு இன்று முறைப்படி அறிவிப்பு வெளியாகிறது
Published on

சென்னை,

அ.தி.மு.க. சட்டத்திட்ட விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா, அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை நடத்தினார். அவரது மறைவுக்கு பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக உள்கட்சி தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப்போனது.

இந்தநிலையில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் வருகிற 13-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3, 4-ந் தேதிகளில் நடந்தது.

வேட்புமனுக்கள் பரிசீலனை

ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அவர்கள் பெயரில் முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என பலரும் வேட்புமனு அளித்துள்ளனர். அதே நேரத்தில், இப்பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து ஒரு சில நிர்வாகிகளும் தனியாக மனு அளித்தனர். இந்தநிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது.

அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை நடத்தும் தேர்தல் கமிஷனர்களான பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மனுக்களை பரிசீலித்தனர். இப்பணியில் அவர்களுக்கு உறுதுணையாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் இருந்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் மனுக்களை தவிர மற்றவை நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்று அறிவிப்பு

எனவே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு போட்டி ஏற்படாததால் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் உள்ளது. இதன் மூலம் அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் எடப்பாடி பழனிசாமியும் மீண்டும் அமரப்போவது உறுதியாகி உள்ளது.

அதன்படி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய 2 பேரும் போட்டியின்றி தேர்வாகும் முறைப்படியான அறிவிப்பை பொன்னையனும், பொள்ளாச்சி ஜெயராமனும் இன்று கூட்டாக வெளியிட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த அறிவிப்பு வெளியானவுடன் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீண்டும் தங்கள் பதவியை இன்றே ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com