

சென்னை,
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் எழுதிய விடைத்தாள் நகல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பெறலாம் என மாநில தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த மாநில தகவல் ஆணையர் வி.பி.ஆர்.இளம்பருதி, சுப்ரீம்கோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி திருத்தப்பட்ட விடைத்தாள்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி உள்ள தகவல்களை குறிப்பிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
எனவே விடைத்தாள்களை நகல்களை கேட்டு பெற இச்சட்டத்தின் படி மனுதாரருக்கு உரிமை உள்ளது. அதன்படி அரசு தேர்வக இயக்ககத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தியோ அல்லது தமிழ்நாடு தகவல் பெறும் உரிமைக் கட்டண விதிகளின்படி பக்கத்திற்கு இரண்டு ரூபாய் வீதம் கட்டணம் செலுத்திய மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சுப்ரீம்கோர்ட்டு மற்றும் இனி வருங்காலங்களில் மாணவர்கள் தாங்கள் எழுதிய திருத்தப்பட்ட விடைத்தாள்களின் நகலினை அரசு தேர்வுகள் இயக்கம் எவ்வளவு மாதங்கள் பராமரிக்கிறதோ அந்த குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் பக்கத்திற்கு இரண்டு ரூபாய் வீதம் செலுத்தி நகல்களை பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்ட அவர், இது குறித்து மாணவர்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.