

ராசிபுரம்,
சேலம் மாவட்டம் ராசிபுரம் அருகே கட்டணாச்சம்பட்டி ஊராட்சி மயானத்தை யொட்டி அத்திபலகானூர் செல்லும் சாலை உள்ளது. அங்கு சாலையோரம் முட்புதரில் சிறு, சிறு தங்க காசுகள் கிடந்ததாக கூறப்பட்டது. அதை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டதோடு, சாலையோர முட்புதரில் போட்டி போட்டு தேட தொடங்கினர்.
அப்போது அங்கு கிடந்த காசுகளை எடுத்துச் சென்றனர். தகவல் அறிந்த ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், அங்கு தங்க காசுகளை போன்று சிறு அளவுகளில் காசுகள் கிடந்ததும், அந்த காசுகளில் 1914 என்ற ஆண்டும். விக்டோரியா மகாராணியின் பெயர் மற்றும் உருவம் அச்சிடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அதோடு, பழங்கால தங்க காசுகள் வடிவில் இருந்த சில காசுகளையும் போலீசார் கைப்பற்றினர். அவை உண்மையில் தங்க காசுகளா அல்லது தங்க முலாம் பூசப்பட்ட போலி காசுகளா என போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் 63 சதவீதம் செம்பும், 37 சதவீதம் ஷிங்கும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த காசுகளை யார் அங்கு வீசி சென்றது? என்பது குறித்தும், யார் முதலில் பார்த்தது? என்பது குறித்தும் ராசிபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.