குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை நகல்

தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை நகலை சிறப்பு கோர்ட்டு வழங்கியுள்ளது.
குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை நகல்
Published on

புகையிலை விற்பனை

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த தடையை மீறி, புகையிலை பொருட்கள் பெருமளவு விற்பனை செய்யப்பட்டன. இந்த சட்டவிரோதமான விற்பனையில் அப்போதைய அமைச்சர், மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டது. இது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தற்போது சென்னை 8-வது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த புகையிலை பொருட்கள் விற்பனை மூலம் பெருந்தொகை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது என்று கூறி மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தனியாக வழக்குப் பதிவு செய்தனர்.

முன்னாள் அமைச்சர்

இந்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரமணா, புகையிலை கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், விக்னேஷ், குண்டூர் உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், துர்கா வீரஅனுமான் மற்றும் இவர்களின் குடும்பத்தினர், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார், நவநீதகிருஷ்ண பாண்டியன், மானசா, குண்டூரைச் சேர்ந்த அருணாகுமாரி, சூர்யா புஷ்பாஞ்சலி, ஸ்ரீவாசவி, போலீஸ் அதிகாரி மன்னர்மன்னன் உள்ளிட்ட 28 பேருக்கு எதிராகவும், 3 நிறுவனங்களுக்கு எதிராகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

ரூ.246 கோடி லஞ்சம்

இதில், இந்த 28 பேரில் 7 பேர் அரசு அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை சட்டவிரோதமாக குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் ரூ.639.40 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டியிருப்பதும், அந்தப் பணத்தின் மூலம் ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இடங்களில் அசையும், அசையா சொத்துகளை வாங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ரூ.246.10 கோடி அளவுக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். எனவே இவர்களை சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை நகல்

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பெயரும் உள்ளதால், இவ்வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு சிறப்பு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்டோர் ஆஜரானார்கள். அவர்களுக்கு குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது. குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களில் கொடுங்கையூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் மட்டும் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக சிறப்பு கோர்ட்டு நீதிபதி கே.ரவி, பிடிவாண்டை பிறப்பித்தார். பின்னர், விசாரணையை வருகிற 21-ந்தேதிக்குத் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com