கோழி தீவனத்துக்காக சோளம் தரம் பிரிக்கும் பணி

கோழி தீவனத்துக்காக சோளம் தரம் பிரிக்கும் பணி
கோழி தீவனத்துக்காக சோளம் தரம் பிரிக்கும் பணி
Published on

தஞ்சை பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளங்களை கோழி தீவனத்துக்காக தரம் பிரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. பயிர்கள் நோய் தாக்குதலில் சிக்கியதால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.

மக்காச்சோளம்

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், நாஞ்சிக்கோட்டை, மாதாக்கோட்டை, குருங்குளம், மேட்டுப்பட்டி, நாகப்பஉடையான்பட்டி, திருக்கானூர்பட்டி, ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாற்று பயிராக மக்காச்சோளம் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மானாவாரி பகுதிகளில் விவசாயிகள் மக்காசோளத்தை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

காரணம் மக்காச்சோள சாகுபடிக்கு குறைந்த தண்ணீர், குறைவான பராமரிப்பு போதுமானதாக உள்ளது. இறைச்சி மற்றும் முட்டை தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கோழி தீவனத்தில் மக்காச்சோளம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன்காரணமாக மக்காளச்சோளங்களை கோழிபண்ணை உரிமையாளர்கள், வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மக்காச்சோள விவசாயிகளுக்கு நல்ல லாபமும் கிடைக்கிறது.

நோய்தாக்குதல்

இதுகுறித்து குருங்குளம் பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள இந்திராகாந்தி கூறுகையில்:- மக்காச்சோளம் நோய் தாக்குதலில் சிக்காமல் இருந்தால் 1 ஏக்கருக்கு அதிகபட்சமாக 50 மூட்டை சோளம் கிடைக்கும். இதன் மூலம் ரூ.1 லட்சம் வரை விவசாயிகளுக்கு கிடைக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சாகுபடி செய்வதற்காக செலவு அதிகரித்து உள்ளது.

குறிப்பாக அதிகமாக சம்பளம் கொடுக்க முன்வந்தாலும் விவசாய பணிகளுக்கு ஆள்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக எந்திரம் மூலம் அறுவடை செய்யும் போது மணிக்கு ரூ.2000 வரை கேட்கின்றனர். இவை ஒரு புறம் இருக்க இந்த ஆண்டு பெரும்பாலான மக்காச்சோளங்கள் வாழநோய் தாக்குதலில் சிக்கிவிட்டன. இதனால் விளைச்சல் மிகவும் குறைந்த அளவே உள்ளது.

தரம்பிரிக்கும் பணி

தற்போது அறுவடை செய்த மக்காச்சோளத்தை கோழிதீவனத்துக்காக தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். வியாபாரிகள் 100 கிலோ மக்காச்சோளத்துக்கு ரூ.2000 வரை தருகின்றனர். இருந்த போதிலும் நோய்தாக்குதலால் இந்த ஆண்டு விளைச்சல் குறைந்ததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அரசு பாதிப்படைந்துள்ள மக்காசோள விவசாயிகளை கணக்கெடுத்து அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கினால் நன்றாக இருக்கும் என கூறினார்.

அதிகலாபம் பெறலாம்

இது சம்பந்தமாக வேளாண் அதிகாரிகள் கூறுகையில், மக்காச்சோள விவசாயிகள் பயிர்களில் நோய் தாக்குதல் ஏற்படும் ஆரம்ப காலத்திலேயே அவற்றின் மாதிரிகளை வேளாண் மையத்துக்கு எடுத்து செல்லலாம். இதனால் அதற்கான தீர்வை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்து ஆலோசனை வழங்குவர். மேலும், நோய் தடுப்பு மருந்துகளையும் கூறுவர்.

இதனை பயன்படுத்தி விவசாயிகள் நோய்தாக்குதலில் மக்காச்சோளங்கள் சிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். இதனை பின்பற்றும் போது விவசாயிகள் மக்காச்சோளத்தில் நல்ல விளைச்சல் பெறலாம் அதிக லாபத்தையும் பெறலாம் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com