கொரோனா - ஒமைக்ரான் நோய் தொற்று: பாதிப்பு விவரங்களை மறைக்காமல் மக்களிடம் எடுத்துக்கூறுவது அரசின் கடமை

கொரோனா - ஒமைக்ரான் நோய்த் தொற்றால் ஏற்படும் உண்மையான பாதிப்பு விவரங்களை மக்களிடம் எடுத்துக்கூறுவது அரசின் கடமை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
கொரோனா - ஒமைக்ரான் நோய் தொற்று: பாதிப்பு விவரங்களை மறைக்காமல் மக்களிடம் எடுத்துக்கூறுவது அரசின் கடமை
Published on

சென்னை,

சட்டமன்றப் பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கும் வரை தமிழகத்தில் நோய்த் தொற்று கட்டுக்குள் இருந்தது. தமிழக மக்கள் இதனால் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்தே நோய்த் தொற்று அதிகமாவதும், குறைவதும் என்று மாறி மாறி இருந்தது. மூன்றாம் அலை மிக அதிக அளவில் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியதை இந்த அரசு கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால், கடந்த 10 நாட்களாக தமிழகம் மூன்றாம் அலையினால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிதமான நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் மற்றும் ஆக்சிஜன் செரிவு 92-க்கு மேல் உள்ளவர்கள், அவரவர் வீடுகளிலேயே 6 முதல் 7 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

பேட்டி உண்மையா? அறிக்கை உண்மையா?

மேலும், நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் 85 சதவீதத்தினருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பும், 15 சதவீதம் பேருக்கு டெல்டா வகை தொற்றும் ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளார். ஆனால் அன்று மாலை, அவருடைய சுகாதாரத் துறையின் அறிக்கையில் சுமார் 800 பேர் தான் ஒமைக்ரான் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.

அப்படி என்றால் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி உண்மையா? அல்லது சுகாதாரத் துறையின் அறிக்கை உண்மையா? நோய்த் தொற்று பாதித்தவர்கள் உண்மையிலேயே ஆஸ்பத்திரிக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமா? அல்லது வீட்டிலேயே இருக்க வேண்டுமா? வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாத ஏழை, எளிய, நடுத்தர மக்கள் எங்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்? சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இதய நோய், நுரையீரல் பாதிப்பு போன்ற இணை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு எந்த மாதிரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக மக்கள் புரியாமல் தவிக்கின்றனர்.

அடிப்படை கடமை

சுகாதாரத் துறை அமைச்சர் தனது அறிக்கையில் ஒமைக்ரான் நோய்த் தொற்று பாதிப்பை உறுதி செய்யும் ஆய்வக வசதி மத்திய அரசிடம்தான் உள்ளது. எனவே, தற்போது ஒமைக்ரான் பரிசோதனையை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளார். எனவே, இந்த அரசு உடனடியாக அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஒமைக்ரான் பரிசோதனை மையங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். எந்தவித நோய்த் தொற்றால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்? என்பதை மக்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டிய அடிப்படை கடமை இந்த அரசுக்கு உண்டு.

கொரோன நோய்த் தொற்று அதிவேகமாகப் பரவி வரும் இச்சூழ்நிலையில் ஒரு பொறுப்புள்ள அமைச்சர் ஊரடங்குக்கு அவசியம் இல்லை என்றும், ஒமைக்ரான் பரிசோதனை மையம் மாநிலத்தில் இல்லை என்றும், ஆக்சிஜன் அளவு 92-க்குக் கீழ் சென்றால் மட்டுமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடக்கூடாது. அதே சமயம், நோய்த் தொற்றால் ஏற்படும் உண்மையான பாதிப்புகளை மறைக்காமல், மக்களிடம் உள்ளது உள்ளபடியே தெரிவிக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உண்டு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com