

சென்னை,
தமிழகத்தில் கொரோனா முதல் மற்றும் 2வது அலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதில் இருந்து மீண்டு வரும் சூழலில், 3வது அலை ஏற்பட கூடிய சாத்தியம் அதிகம் உள்ளது என நிபுணர்களின் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
2வது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறை தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொரோனா 3வது அலையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.
இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, தமிழகத்தில் 3வது அலையை தடுக்கவும், அதனை எதிர்கொள்ளவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தினமும் சராசரியாக 8 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
அங்கு தினசரி 5 டன் உற்பத்தியாகும் வகையில் 2 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலமாக அங்கு ஆக்சிஜன் தேவை, மருத்துவமனை வளாகத்திலேயே பூர்த்தி செய்யப்படும். இந்த கட்டமைப்புக்கு பராமரிப்பு செலவு மற்றும் மின்சார செலவு அதிகரிக்கும். ஆனால் உரிய நேரத்தில் ஆக்சிஜன் கிடைத்து பல உயிர்களை காப்பாற்ற முடியும். மேலும் 3வது அலைக்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தியை பெற முடியும்.
அந்த வகையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 3 உற்பத்தி மையங்களில் 5 டன்னும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 3 உற்பத்தி மையங்களில் 5.2 டன்னும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 உற்பத்தி மையங்களில் 4.8 டன்னும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உற்பத்தி மையம் ஒன்றில், 1 டன்னும், கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் உற்பத்தி மையம் ஒன்றில், 1 டன்னும் தினசரி ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா 3வது அலையை தடுக்கவும், அதனை எதிர்கொள்ளும் வகையிலும், இவை விரைவில் பயன்பாட்டுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.