‘‘பொதுமக்கள் உறுதி எடுத்தால் மட்டுமே கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்’’; எம்.எல்.ஏ.க்கள் குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

‘கொரோனாவை வாங்கிக்கொள்ளவும் மாட்டேன்; அடுத்தவருக்கு கொடுக்கவும் மாட்டேன்’ என்று பொதுமக்கள் உறுதி எடுத்துக்கொண்டால் மட்டும்தான் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று அனைத்து சட்டமன்ற கட்சி எம்.எல்.ஏ.க்கள் குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
‘‘பொதுமக்கள் உறுதி எடுத்தால் மட்டுமே கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்’’; எம்.எல்.ஏ.க்கள் குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
Published on

மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தடுக்க எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அனைத்து சட்டமன்ற கட்சி எம்.எல்.ஏ.க்கள் குழுவுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில், தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் நா.எழிலன், அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏ.எம்.முனிரத்தினம், பா.ம.க.வை சேர்ந்த ஜி.கே.மணி, பா.ஜ.க.வை சேர்ந்த நயினார் நாகேந்திரன், ம.தி.மு.க.வை சேர்ந்த சதன் திருமலைக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த எஸ்.எஸ்.பாலாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த வி.பி.நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ராமச்சந்திரன், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த தி.வேல்முருகன், புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

காலை 11.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

போதுமான ஆக்சிஜன் இருப்பு

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதை நீங்கள் அறிவீர்கள். ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க பெருமளவிலான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் போதுமான ஆக்சிஜன் இருப்பு உள்ளதை உறுதி செய்திருக்கிறோம்.

அறிவுரைகளை சிலர் கேட்பதில்லை

இன்னொரு பக்கத்தில் மருத்துவ உள்கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளையும் அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதா என்று கேட்டால், குறைந்துள்ளதே தவிர கட்டுக்குள் இன்னும் வரவில்லை என்றே தான் சொல்ல முடியும்.முழு ஊரடங்கு பிறப்பிக்கும்போது பொதுமக்களின் நன்மைக்காக சில தளர்வுகளை நாம் அறிவிக்கிறோம். தேவையான மளிகை, காய்கறிகளை வாங்கிக் கொள்வதற்காக மட்டுமே அந்த தளர்வுகளை அறிவித்தோம். ஆனால், அந்த தளர்வுகளை பயன்படுத்தி அவசியமில்லாமல் வெளியில் சுற்றுவதும் சிலருக்கு வழக்கம் ஆகிவிட்டது. இப்படி வருபவர்களை அறிவுரை சொல்லி அனுப்பி வையுங்கள் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டோம். அத்தகைய அன்பான அறிவுரைகளையும் சிலர் கேட்பதாக தெரியவில்லை.

பொதுமக்கள் உறுதி எடுத்தால்...

முழு ஊரடங்கு என்பது பொதுமக்களின் நன்மைக்காகத் தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் உயிர்களை காக்கவே, பாதுகாக்கவே போடப்பட்டுள்ளது. அதனை உணராதவர்களாக பொதுமக்களில் சிலர்

இருப்பது வேதனை தருகிறது. முழு ஊரடங்கை சிலர், ஏதோ விடுமுறைக்காலம் என்பதாக நினைத்து ஊர் சுற்றி வருகிறார்கள். இது விடுமுறைக் காலம் அல்ல, கொரோனா காலம் என்பதை உணராமல் இன்னமும் சிலர் இருக்கிறார்கள். கொரோனாவை வாங்கிக் கொள்ளவும் மாட்டேன் - கொரோனாவை அடுத்தவருக்கு கொடுக்கவும் மாட்டேன் என்று பொதுமக்கள் உறுதி எடுத்துக் கொண்டால் மட்டும்தான் இந்த நோய் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதனை உணர்த்துவதற்காகத் தான் பல்வேறு திரையுலகக் கலைஞர்களை வைத்து விழிப்புணர்வு வீடியோக்களைத் தயாரித்து பொதுமக்களுக்குச் சொல்லி வருகிறோம்.

விரைவில் முற்றுப்புள்ளி

கொரோனா குறித்த பயம், பொதுமக்களின் பேச்சில் தெரிகிறது. ஆனால் அது செயலில் தெரிய வேண்டும். அத்தகைய எச்சரிக்கை உணர்வை இன்னமும் பொதுமக்களிடம் விதைத்தாக வேண்டும். கடந்த ஓராண்டு காலத்தில் விலைமதிப்பில்லாத மனித உயிர்களை இழந்துள்ளோம். இதனால் எத்தனையோ குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இத்தகைய இழப்புகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.கடந்த ஓராண்டு காலத்தில் நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் அடைந்துள்ள துன்ப துயரங்கள் அளவில்லாதது. ஏராளமான மருத்துவர்களை நாம் இழந்துள்ளோம். மருத்துவத்துறையே மிகப்பெரிய மனரீதியான நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. தங்களது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு இதற்கு மேலும் சுமையை, அழுத்தத்தைக் கொடுக்க முடியாது.

மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை

கொரோனா காரணமான மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பவர்கள் பள்ளி - கல்லூரி மாணவ, மாணவியர்கள். அவர்களுக்கு விடுமுறை என்பது மகிழ்ச்சிக்குரிய காலமாக இருந்தது, இப்போது மிகப்பெரிய துன்பம் தருவதாக மாறிவிட்டது. மன அழுத்தம் கொண்டவர்களாக அவர்கள் மாறிவிடக் கூடும். இன்னும் எத்தனை மாதங்கள் பள்ளி, கல்லூரிகளை மூடி வைத்திருக்க முடியும்?

அவர்களுக்கு விரைவில் கல்வியையும் எதிர் காலத்தையும் உருவாக்கித் தந்தாக வேண்டும்.இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு, இங்கு வருவதற்கு முன்பாக, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினேன். அதில் அவர்களது ஒருமித்த கருத்தாக, தளர்வுகளற்ற ஊரடங்கினை முழுமையாக, தீவிரமாக அமல்படுத்தினால் மட்டுமே, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த இயலும் என்று ஆலோசனை வழங்கினார்கள்.

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

மாவட்டங்களில் நான் மேற்கொண்ட பயணங்களின் போதும், இதே கருத்து பரவலாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. எனவே, மேற்படி சூழ்நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்த முடிவினை அரசு எடுக்க வேண்டியுள்ளது. நோய்த் தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே உங்கள் அனைவரது ஆலோசனைகளையும் பெற்று, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து, அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com