எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை; அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுக்கும் நடத்தப்பட்டது

தமிழக சட்டசபை வருகிற 14-ந்தேதி கூட இருப்பதையொட்டி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை; அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுக்கும் நடத்தப்பட்டது
Published on

சென்னை,

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் நோய்த்தொற்று பரவல் கட்டுப்பட மறுக்கிறது.

இந்த சூழ்நிலையில், தமிழக சட்டசபை வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) கூடுகிறது. இதனால் சட்டசபைக்கு வருபவர்கள் அனைவருக்கும் அவை கூடுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் அறிவித்து இருந்தார். 11-ந்தேதி (நேற்று) முதல் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அவர் கூறி இருந்தார்

சட்டசபையில் பணியாற்ற வேண்டிய ஊழியர்கள், பாதுகாவலர்கள், துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டு, கொரோனா நோயின்மைச் சான்றிதழை கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார்.

அந்த அறிவிப்பின் அடிப்படையில் நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகள், சென்னையில் உள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு சென்று அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தினார்கள்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தார். சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

இதேபோல், மற்ற அமைச்சர்களுக்கும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் அவர்களுடைய வீடுகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் பரிசோதனைமேற்கொள்ளப்பட்டது.

எம்.எல்.ஏ.க்கள் பலர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், காய்ச்சல் முகாம்களில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர்.

சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் குடியிருப்பு வளாகத்திலும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சட்டசபை செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு சென்னை கோட்டையில் உள்ள சட்டசபை செயலக வளாகத்தில் முகாம் அமைத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா பரிசோதனை மேற்கொண்ட அனைவருக்கும் இன்று (சனிக்கிழமை) முடிவு தெரிய வரும். அதில் யாருக்காவது கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டால், அவர்கள் சட்டசபைக்கு செல்ல அனுமதி அளிக்கப்படாது.

தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான சான்றிதழ் சுகாதாரத்துறை மூலம் வழங்கப்படும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள் அந்த சான்றிதழை வைத்து சட்டசபைக்குள் செல்லலாம்.

சுகாதாரத்துறை வழங்கும், அந்த சான்றிதழை பெற்ற மற்றவர்கள், சட்டசபை செயலகத்தில் வழங்கப்படும் பிரத்யேக அனுமதி சீட்டை பெற வேண்டும். அந்த சீட்டை காட்டினால்தான் சட்டசபைக்குள் செல்ல அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com