

நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் அரசு சித்த மருத்துவக்கல்லூரி உள்ளது. இங்கு கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த 16-ந்தேதி முதல் கல்லூரி திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு செய்முறை பயிற்சிக்கு நேரடி வகுப்பு நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 மாணவிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 3 மாணவிகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 100 மாணவிகளுக்கு பரிசோதனை செய்து பார்த்ததில், மேலும் 4 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த மாணவிகளுடன் விடுதியில் தங்கி இருந்த மேலும் 200 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் மேலும் 7 மாணவிகளுக்கு கொரோனா தொற்று பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக 7 மாணவிகளும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி கல்லூரி வளாகத்தில் கிழக்கு நுழைவு வாசல் அருகில் உள்ள மாணவிகள் விடுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது. அங்கிருந்து மாணவிகள் வெளியே செல்லவும், பெற்றோர் அங்கு வரவும் தடை விதிக்கப்பட்டது.