தமிழகத்தில் கொரோனா தொற்று 2½ லட்சத்தை நெருங்குகிறது

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 2½ லட்சத்தை நெருங்கி வருகிறது. பிரசவித்த இளம்பெண் உள்பட 82 பேர் பலியாகினர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று 2½ லட்சத்தை நெருங்குகிறது
Published on

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 58 ஆயிரத்து 818 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,892 ஆண்கள், 2,530 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 4 பேர் என மொத்தம் 6,426 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 1,117 பேரும், செங்கல்பட்டில் 540 பேரும், நெல்லை, திருவள்ளூரில் தலா 382 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 11 பேரும், அரியலூரில் 4 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 24 லட்சத்து 42 ஆயிரத்து 482 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 114 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 55 ஆண்களும், 92 ஆயிரத்து 32 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 27 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 11 ஆயிரத்து 697 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 29 ஆயிரத்து 113 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 54 பேரும், தனியார் மருத்துவமனையில் 28 பேரும் என 82 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் அரியலூர் மாவட்டத்தில் பிரசவம் முடிந்து 9 நாட்கள் ஆன 22 வயது இளம்பெண் மூச்சுதிணறல் ஏற்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானது. மேலும் நாகப்பட்டினத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும் கொரோனா நோய் தொற்றுக்கு பலியாகி உள்ளார்.

நேற்று உயிரிழந்தவர்களில் சென்னையில் 21 பேரும், மதுரையில் 9 பேரும், திண்டுக்கலில் 6 பேரும், காஞ்சீபுரம், விருதுநகரில் தலா 5 பேரும், வேலூர், திருவள்ளூரில் தலா 4 பேரும், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், சிவகங்கையில் தலா 3 பேரும், கோவை, கடலூர், தேனி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெல்லையில் தலா இருவரும், திருவாரூர், தஞ்சாவூர், தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, ஈரோடு, அரியலூரில் தலா ஒருவரும், என 23 ம வட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் 3,741 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 927 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1234 பேரும், செங்கல்பட்டில் 471 பேரும், திருவள்ளூரில் 461, பேரும், அடங்குவர். இதுவரையில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 883 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 57 ஆயிரத்து 490 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com