அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள் தணிக்கை செய்யப்படும்; சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் முடிவுகள் தணிக்கை செய்யப்படும் என சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள் தணிக்கை செய்யப்படும்; சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
Published on

தொற்று குறையும் அறிகுறி

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் உச்சம் ஏற்றம் அடையாமல் இருக்க முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் போர்க்கால அடிப்படையில் மாவட்டங்களில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். திருப்பூர், ஈரோடு, திருவாரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் சவாலாக உள்ளன.சென்னை, நெல்லை, நாமக்கல், விழுப்புரம், செங்கல்பட்டு, சேலம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலத்தில் நோய் எண்ணிக்கை குறைவதற்கான அறிகுறி உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3-க்கு மேல் இருக்கும் தெருக்கள் 12 ஆயிரம் உள்ளன. அந்த தெருக்களில் வசிப்பவர்கள் வெளியில் வராமல் இருக்க அனைத்து வசதியும் செய்து கொடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தணிக்கை செய்ய முடிவு

அடுத்த சில நாட்களுக்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்புக் கொடுத்தால் தொற்று எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புள்ளது. கூடுதல் எண்ணிக்கையில் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தவறான தகவலை பதிவேற்றம் செய்ததாக வந்த புகாரின் பேரில் ஒரு தனியார் ஆய்வகத்தின் மீது விசாரணை நடந்து வருகிறது. இனி அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் கூடுதல் எண்ணிக்கையிலான தொற்று உறுதி செய்யப்பட்டாலும், தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டாலும், அந்த முடிவுகளை தணிக்கை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.அந்த வகையில் அந்த தனியார் ஆய்வகத்தில் நடந்த தவறுபோல வேறு எந்த ஆய்வகங்களிலும் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கான

கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதில் ஏதாவது முறைகேடு நடந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்துக்கு மத்திய அரசு இந்த மாதம் கொடுக்க வேண்டிய 13 லட்சம் தடுப்பூசிகளில் 11 லட்சம் மட்டுமே வந்துள்ளது. எனவே அது முன்னுரிமை அடிப்படையில் உபயோகப்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com