கொரோனா தடுப்பு பணி; உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சமாக நிதியுதவி​ உயர்த்தி அறிவிப்பு

கொரோனா தடுப்பு பணியில் உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.50 லட்சமாக நிதியுதவியை உயர்த்தி அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணி; உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சமாக நிதியுதவி​ உயர்த்தி அறிவிப்பு
Published on

சென்னை,

சென்னை கீழ்பாக்கத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனா பாதித்து உயிரிழந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த மருத்துவரின் உடலை சுமந்து வந்த ஆம்புலன்சு மீதும், அதில் இருந்த மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மீதும் கற்கள் வீசப்பட்டன. இதில் அவர்கள் காயமடைந்து உள்ளனர். இதன்பின்பு அந்த பகுதியில் இருந்து மருத்துவரின் உடலை வேறிடத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர்.

இந்த தாக்குதலில் தொடர்புடைய 20 பேர் கைது செய்யப்பட்டனர். 90 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றால் இறந்த மருத்துவரின் மனைவி, மகனுடன் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசி முதல் அமைச்சர் பழனிசாமி ஆறுதல் வழங்கினார். எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்க வேண்டும் என மருத்துவரின் மகனுக்கு அவர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதன்பின்பு, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவம், காவல், உள்ளாட்சி, தூய்மைப்பணியாளர் உள்பட அனைத்து துறை பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டல் அவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரூ.50 லட்சமாக நிதியுதவியை உயர்த்தி அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழப்பவர்களின் உடல் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விருது வழங்கப்படும். சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த கூடுதலாக 2 அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com