

சென்னை,
கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்களுக்கு போதுமான முககவசங்கள், கிருமிநாசினிகள் போன்றவை தடையின்றி கிடைக்க செய்ய வேண்டும். அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும்.
மேலும், ஒரு மாவட்டத்துக்குள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் களப்பணியாளர்களை ஈடுபடுத்தும்போது, அவரவர் பணிபுரியும் பகுதிக்கு அருகாமையிலேயே அவர்களுக்கு பணிகளை வழங்க வேண்டும். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்று பணிகளுக்கு அனுப்பும் போது தொலை தூரத்தில் உள்ளவர்களை பணியமர்த்த கூடாது. பணி முடிந்து விரைவில் வீடு திரும்ப ஏதுவாக களப்பணிகள் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டு, அதற்கேற்ப பணிகளை வழங்கிட வேண்டும்.
மாநிலத்தின் பல்வேறு இடங்களில், பொது போக்குவரத்து வசதிகள் முழுமையாக இல்லை. எனவே, போக்குவரத்து வசதிகளை பணியாளர்களுக்கு ஏற்படுத்தி தருவது சுகாதாரத்துறையின் கடமை. அதன்படி, களப்பணியில் உள்ளவர்களுக்கு தேவையின் அடிப்படையில் வாகனங்கள் அல்லது வாடகை வாகன வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்.
வட்டம் மற்றும் மாவட்ட அளவில் சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு கூட்டங்களை நடத்துவது குறித்து ஏற்கனவே பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், கூடுமான வரையில் பணி நேரத்திற்குள் ஆய்வு கூட்டத்தினை நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.