தமிழக அரசு உடன்பட்டாலும், படாவிட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தி.மு.க.வின் பங்களிப்பை வழங்குவோம் - மு.க.ஸ்டாலின் தகவல்

தமிழக அரசு உடன்பட்டாலும், படாவிட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தி.மு.க.வின் பங்களிப்பையும், ஆதரவையும் வழங்குவோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு உடன்பட்டாலும், படாவிட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தி.மு.க.வின் பங்களிப்பை வழங்குவோம் - மு.க.ஸ்டாலின் தகவல்
Published on

சென்னை,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இது மருத்துவம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டவோ, அரசியல் செய்யவோ அவசியமில்லை என டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இந்தநிலையில், அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்பட வேண்டியதன் நோக்கத்தை வலியுறுத்தி, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அனைத்துக்கட்சி கூட்டத்தின் நோக்கம், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் தமிழக மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே ஆகும். தமிழக அரசு இதற்கு விழைகிறதோ இல்லையோ, நாங்கள் தொடர்ந்து மக்களின் இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் பங்களிப்பையும் முழு ஆதரவையும் வழங்குவோம் என கூறியுள்ளார்.

மேலும், மராட்டிய மாநிலத்தில் உணவும், இருப்பிடமும் இல்லாமல் சிக்கித் தவிக்கும் 120 வியாபாரிகளுக்கு உதவ வேண்டும் என்று மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்ரேக்கு தனது டுவிட்டர் பதிவு மூலம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

இதேபோல், கர்நாடக மாநிலம் மைசூரு மற்றும் கங்கவதி பகுதிகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கும், தெலுங்கானா மாநிலத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்று முதல்-மந்திரி சந்திரசேகர ராவுக்கும் டுவிட்டர் பதிவு மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து, தெலுங்கானாவில் சிக்கித் தவித்தவர்களுக்கு தலா 12 கிலோ அரிசி மற்றும் தலா ரூ.500 உதவித்தொகை வழங்கப்பட்டதாக அந்த மாநில நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி கே.டி.ராமாராவ் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அதேபோன்று, மராட்டிய மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்ரேவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு முறையான உணவு மற்றும் இருப்பிட வசதிகள் அளிக்கப்பட்டு, அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் டுவிட்டரில் கூறியுள்ளார்.

இதையடுத்து தனது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிய உத்தவ் தாக்ரேவுக்கும், கே.டி.ராமாராவுக்கும் மு.க.ஸ்டாலின் தனித்தனியே நன்றி தெரிவித்து டுவிட்டர் பதிவுகள் வெளியிட்டுள்ளார். அதில், இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழக வியாபாரிகளுக்கு உடனடியாக உதவி செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com