திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா பரிசோதனை சான்று கட்டாயமில்லை

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா பரிசோதனை சான்று கட்டாயமில்லை என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா பரிசோதனை சான்று கட்டாயமில்லை
Published on

சென்னை,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில், உலக பிரசித்திபெற்ற சனிபகவான் கோவிலில் நாளை காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் தலைமையில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விழாவில் கலந்துகொள்ள ஆன்லைனில் முன்பதிவு அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி கவர்னர் கிரண்பெடி தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில், கொரோனா விதிகளுக்கு உட்பட்டு சனிப்பெயர்ச்சி விழாவை பாதுகாப்பாக நடத்துவது, பக்தர்களை எவ்வாறு பாதுகாப்பாக தரிசனத்துக்கு அனுமதிப்பது, பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து சனிப்பெயர்ச்சி விழாவை, குறைந்த அளவிலான பக்தர்கள் பங்கேற்புடன் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சனிபெயர்ச்சி அன்று பக்தர்கள் தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் எதுவும் செய்யப்பட மாட்டாது. முக்கியமாக, 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளவர்கள், தரிசனத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், இந்த விழாவில் பங்கேற்க கொரோனா பரிசோதனை சான்று கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதன் மீது நடந்த விசாரணையில், திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா பரிசோதனை சான்று கட்டாயமில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com