

சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் நடைபெறக்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரானது, கொரோனா பரவல் காரணமாக, சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்திருக்கும் கலைவாணவர் அரங்கில் நடைபெறுகிறது. அந்த வகையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு வரும் 21 ஆம் தேதி முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தொடருக்கான அரங்கங்கள் மற்றும் ஏற்பாடுகளை சபாநாயகர் அப்பாவு இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்றி, பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதா? என்பதை அவர் உறுதி செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அவர் கூறியதாவது;-
தமிழகத்தின் 16-வது சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 21 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரும் கலைவாணர் அரங்கிலேயே நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
நாளை முதல் கலைவாணர் ஆரங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு, தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்படும். அதில் ஏதேனும் ஒரு இடத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழ் பெற்ற பிறகு தான் சட்டமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.