மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி திட்டம் - எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்

மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி திட்டம் - எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்
Published on

மதுரை,

இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷில்டு என்ற கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசியை மத்திய அரசு அதிக அளவில் கொள்முதல் செய்து ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளது. நாடு முழுவதும் இந்த தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.அந்தந்த மாநிலங்களில் முதல்-அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் தொடங்கி வைக்கிறார். அதற்கான நிகழ்ச்சி மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் இன்று காலை நடக்க இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் அன்பழகன் ஆகியோர் நேற்று ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தனர்.

முன்னதாக அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விழாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இதில் கலந்துகாள்ள 650 மாடுபிடி வீரர்களும், 700 மாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு மற்றும் கொரோனா தடுப்பூசி திட்டத்தை தாடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு மதுரை வந்தார். அவரை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்றனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி, சொக்கிகுளத்தில் உள்ள தனியார் விருந்தினர் இல்லத்தில் தங்கினார்.

இதற்கிடையே மதுரையில் கொரோனா தடுப்பூசி திட்ட தொடக்க நிகழ்ச்சி குறித்து மதுரையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியா முழுவதும் 3 ஆயிரம் மையங்களிலும் தமிழகத்தில் 166 மையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட 4 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களது சொந்த விருப்பத்திற்கேற்ப தடுப்பூசி போடப்படுகிறது. பல மருத்துவ பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தானாக முன்வந்துள்ளனர். தமிழகத்திற்கு முதற்கட்டமாக 5 லட்சத்து 56 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இது அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து கொடுக்கபட்டுள்ளது.

முன்கள பணியாளர்கள் தடுப்பூசிக்காக வருகிற 25-ந்தேதி வரை இணைய தளத்தில் பதிவு செய்யலாம். மேலும், தடுப்பூசிகளை இருப்பு வைக்க பிரத்யேகமாக நடமாடும் குளிசாதன பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. தடுப்பூசி போட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர். தடுப்பூசி போட்டவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தடுப்பூசியை விஞ்ஞான ரீதியாக அணுக வேண்டும். தடுப்பூசியால் பின்விளைவு இல்லை என தெரிவிக்கபட்டுள்ளது. எனவே அது தொடர்பாக பயப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com