தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போதுமான அளவில் உள்ளது முதன்மை செயலாளர் தகவல்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போதுமான அளவில் உள்ளது முதன்மை செயலாளர் தகவல்
Published on

சென்னை,

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது. ஒமைக்ரான் அலையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அரசு குறைக்கவில்லை. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், ஒமைக்ரான் பாதிப்பு வேகமாக பரவும் நிலை இருப்பதால் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

வரும் நாட்கள் தமிழகத்துக்கு மிக முக்கியமானதாகும். எனவே தமிழக மக்கள் அடுத்த சில நாட்களுக்கு மிக கவனமாக இருக்க வேண்டும். முககவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவைகளை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கூட்டமாக இருப்பதை தவிர்ப்பதாலும், முககவசத்தை முறையாக அணிவதாலும் கொரோனா பரவலின் தீவிர தன்மை குறையும்.

தடுப்பூசி இருப்பு

தமிழகத்தில் ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தளவே நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 3-வது அலையை எதிர்கொள்ள 1 லட்சத்துக்கும் அதிகமான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

தமிழக ஆஸ்பத்திரியில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரு சதவீதம் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏதாவது ஒரு ஆஸ்பத்திரியில் படுக்கை இல்லை என்பதை அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் படுக்கை நிரம்பி விட்டதாக கருத வேண்டாம்.

தற்போது 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு ஏற்படும் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. எனவே தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போதுமான அளவு உள்ளது.

மேலும் கூடுதலாக கொரோனா தடுப்பூசி வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். டெல்டா வைரஸ் பாதிப்பின் போது பாதிக்கப்பட்டவர்களில் 25 முதல் 30 சதவீதத்தினருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை வசதி தேவைப்பட்டது. ஒமைக்ரான் பாதிப்பில் 5 முதல் 10 சதவீதம் வரை தான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை வசதி தேவைப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வின்போது ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ஜெயந்தி உடனிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com