தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை

தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை

தமிழகத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை குறித்து மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
Published on

சென்னை,

இந்தியா முழுவதும் அவசர கால தடுப்பூசி செலுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த 2-ந்தேதி தமிழகத்தில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஒத்திகை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

அதேபோல் தடுப்பு மருந்தை சேமிப்பதற்கு குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள், தடுப்பு மருந்தை தடுப்பூசி செலுத்தும் மையத்துக்கு கொண்டு செல்ல குளிரூட்டப்பட்ட பெட்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2 கோடிக்கு மேற்பட்ட தடுப்பு மருந்துகளை சேமிக்க கட்டமைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தன், சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன், கொரோனா தடுப்பூசி குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஜெ.விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி எண்ணிக்கை குறித்தும், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட எடுக்கப்பட்ட முன்னோட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்தநிலையில் நாடு முழுவதும் இன்று 736 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு மருந்துக்கான ஒத்திகை நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு கிடங்குகளையும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தன் இன்று (வெள்ளிக்கிழமை) ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

இதற்காக மத்திய மந்திரி ஹர்சவர்தன், நேற்று இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார். அவரை சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று தங்கினார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலை ஆய்வை தொடங்கும் மத்திய மந்திரி ஹர்சவர்தன், தொடர்ந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கும், பெரியமேட்டில் உள்ள பொது மருத்துவ பொருட்கள் சேமிப்பு கிடங்கையும், அதைத்தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள தடுப்பு மருந்து மையத்தையும் பார்வையிடுகிறார். இதைத்தொடர்ந்து செங்கல்பட்டில் உள்ள தடுப்பு மருந்து மையத்தையும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக சுகாதாரத்துறை உயர் அதிகாரிஒருவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் தடுப்பூசி ஒத்திகையை பார்வையிடும் மத்திய மந்திரி ஹர்சவர்தன் இன்று மதியம் 1 மணி அளவில் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமியை நேரில் சந்திக்க உள்ளார்.

அப்போது தமிழகத்துக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை, கொரோனா தடுப்பூசி செலுத்த தேவையான நடவடிக்கைகள் மற்றும் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com