கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும் - பிரதமர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தி.மு.க. வலியுறுத்தல்

கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும் என்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும் - பிரதமர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தி.மு.க. வலியுறுத்தல்
Published on

சென்னை,

பிரதமர் மோடி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தி.மு.க. பொருளாளரும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு பேசியதாவது:-

கொரோனா தொற்று பாதிப்பில் உலகளாவிய நிலையில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. தொற்றைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைக்கான விலை அதிகமாக உள்ளதுடன் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே பரிசோதனை எண்ணிக்கையை நாடு முழுவதும் அதிகரிக்கவும், செலவை குறைக்கவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். உலகளவில் பல்வேறு நாடுகளில் 161 தடுப்பூசி வகைகள் தயாரிப்பு வெவ்வேறு நிலைகளில் உள்ளன.

இவற்றில் 2 தடுப்பூசி மருந்துகள் இந்தியாவைச் சேர்ந்தவை. மத்திய அரசும், பிரதமரும் இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்கு பாராட்டுக்குரியவர்கள். நமது மக்கள் தொகை 130 கோடி என்று கணக்கில் கொண்டு பார்த்தால் ஊசி விலை சராசரி ஆயிரம் ரூபாய் என்று வைத்து மதிப்பீடு செய்தாலும், மொத்த செலவு ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் கோடி வரை ஆகும்.

தடுப்பூசிக்கான செலவின் அளவைப் பார்த்து அரசு மலைத்து போகக்கூடாது. தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய மக்கள் தொகையை முன்னுரிமை அடிப்படையில் வகைப்படுத்தி உரிய திட்டத்தை உடனடியாக தயாரித்தால்தான் 130 கோடி மக்களுக்கும் ஊசிமருந்து செலுத்தும் பெரும் சவாலை சந்திக்க முடியும். கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கவேண்டும்.

130 கோடி மக்களுக்கு உணவு வழங்கிடும் நாட்டின் விவசாயிகளை இதுபோன்ற கடுங்குளிரில் நாட்கணக்கில் போராட வைப்பது கொஞ்சமும் நியாயம் அல்ல. ஆகவே, பிரதமர் போராடும் விவசாயிகளை உடனடியாக அழைத்து பேசி சுமுக தீர்வுகாண வேண்டும்.

இவ்வாறு டி.ஆர்.பாலு பேசினார்.

விவசாயிகள் பிரச்சினை பற்றி டி.ஆர்.பாலு பேசியதற்கு நாடாளுமன்ற துறை மந்திரி ஆட்சேபனை தெரிவித்ததுடன் விவசாயிகள் தொடர்பாக பேசக்கூடாது என்று கூறினார். இதற்கு கடுமையான கண்டன குரலை எழுப்பிய டி.ஆர்.பாலு, கூட்டத்தின் தொடக்கத்தில் மந்திரியும், செயலாளரும் முழுக்க முழுக்க இந்தியில் பேசியதையும், உரிய ஆங்கில மொழி மாற்றம் ஏற்பாடு செய்யப்படாதது குறித்தும் தனது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com